திருச்செங்காட்டங்குடி – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருச்செங்காட்டங்குடி

(1)
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங்குடி அதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச்சரத்தானே
(2)
வாரேற்ற பறையொலியும் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோடோங்கிய சீர் விழவோவாச்
சீரேற்றம் உடைத்தாய செங்காட்டங்குடி அதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச்சரத்தானே
(3)
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான், கையதோர்
சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்
கரந்தையான், வெண்ணீற்றான், கணபதீச்சரத்தானே
(4)
தொங்கலும் கமழ்சாந்தகில் புகையும் தொண்டர்கொண்டு
அங்கையால் தொழுதேத்த அருச்சனைக்கன்றருள் செய்தான்
செங்கயல் பாய் வயலுடுத்த செங்காட்டங்குடி அதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச்சரத்தானே
(5)
பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங்குடி அதனுள்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச்சரத்தானே
(6)
நுண்ணியான், மிகப்பெரியான், நோவுளார் வாயுளான்
தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்
கண்ணியான், கண்ணுதலான் கணபதீச்சரத்தானே
(7)
மையினார் மலர் நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் அகன்கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையினார் கூரெரியான் கணபதீச்சரத்தானே
(8)
தோடுடையான் குழையுடையான், அரக்கன்தன் தோளடர்த்த
பீடுடையான், போர்விடையான் பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்தாடும்
காடுடையான், நாடுடையான், கணபதீச்சரத்தானே
(9)
ஆனூரா உழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச்சரத்தானே
(10)
செடிநுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
படிநுகராதயர் உழப்பார்க்கருளாத பண்பினான்
பொடிநுகரும் சிறுத்தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச்சரத்தானே
(11)
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனல்படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத்திருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page