திருச்சாய்க்காடு – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருச்சாய்க்காடு

(1)
நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்
சித்தமொன்ற வல்லார்க்கருளும் சிவன் கோயில்
மத்த யானையின் கோடும் வண்பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவு சாய்க்காடே
(2)
பண்தலைக் கொண்டு, பூதங்கள் பாட நின்றாடும்
வெண்தலைக் கருங்காடுறை வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்கக் குலாவித்
தண்டலைத் தடமா மயிலாடு சாய்க்காடே
(3)
நாறு கூவிள நாகிள வெண்மதி அத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரான்உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண்கதலிப் புதர்மேவு சாய்க்காடே
(4)
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்கல் ஓசையும் மீட்டிய சரக்கொடும் ஈண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகு சாய்க்காடே
(5)
ஏழைமார் கடைதோறும் இடுபலிக்கென்று
கூழை வாளரவாட்டும் பிரான்உறை கோயில்
மாழையொண் கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூம்
தாழை வெண்மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே
(6)
துங்க வானவர் சூழ்கடல் தாம்கடை போதில்
அங்கொர் நீழல்அளித்த எம்மான்உறை கோயில்
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரித் தடங்கடல்உந்து சாய்க்காடே
(7)
வேத நாவினர்; வெண் பளிங்கின் குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல் வண்டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில் மறைந்தூடு சாய்க்காடே
(8)
இருக்கு நீள்வரை பற்றி அடர்த்து அன்றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே
(9)
மாலினோடு அயன் காண்டற்கரியவர்; வாய்ந்த
வேலையார் விடமுண்டவர் மேவிய கோயில்
சேலினேர் விழியார் மயிலாலச் செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே
(10)
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க்கென்றும்
ஆத்தமாக அறிவரிதாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே
(11)
ஏனையோர் புகழ்ந்தேத்திய எந்தை சாய்க்காட்டை
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனமின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வானநாடு இனிதாள்வர் இம்மானிலத்தோரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page