திருச்சாய்க்காடு – அப்பர் தேவாரம் (1):

<– திருச்சாய்க்காடு

(1)
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம்என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே
(2)
வடங்கெழு மலை மத்தாக, வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்தேவர் அஞ்சி
அடைந்துநும் சரணம்என்ன, அருள் பெரிதுடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே
(3)
அரணிலா வெளிய நாவல் அருநிழலாக ஈசன்
வரணியலாகித் தன்வாய் நூலினால் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித்
தரணி தான்ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே
(4)
அரும்பெரும் சிலைக்கை வேடனாய் விறல் பார்த்தற்கன்று
உரம்பெரிது உடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம் பெரிதுடையனாக்கி வாளமர் முகத்தின் மன்னும்
சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே
(5)
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திர மறையதோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே
(6)
ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநல் சண்டிக்கீந்தார் சாய்க்காடு மேவினாரே
(7)
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரரேத்த ஆயிர முகமதாகி
வையக நெளியப் பாய் வான்வந்திழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
(8)
குவப்பெரும் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெரும் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசமாட்ட
உவப்பெரும் குருதி சோர ஒருகணை இடந்தங்கப்பத்
தவப்பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே
(9)
நக்குலா மலர்பன்னூறு கொண்டுநல் ஞானத்தோடு
மிக்கபூசனைகள் செய்வான், மென்மலரொன்று காணாது
ஒக்குமென் மலர்க்கண் என்றங்கொரு கணைஇடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே
(10)
புயங்கள் ஐஞ்ஞான்கும் பத்துமாயகொண்டு அரக்கன் ஓடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலியஞ்ச
வியன்பெற எய்திவீழ விரல்சிறிது ஊன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page