திருச்சத்திமுற்றம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(1)
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை, போகவிடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய், முழங்கும் தழற்கைத்
தேவா திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(2)
காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக், காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப், பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந்து அறுப்பாய், அடியேற்கருளாய், உன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய், திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(3)
பொத்தார் குரம்பை புகுந்து, ஐவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை, மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய், அமரர்கள்தம்
சித்தா, திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(4)
நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந்நீள்நிலத்தொன்று
அல்லாக் குழிவீழ்ந்து அயர்வுறுவேனை வந்தாண்டு கொண்டாய்
வில்லேர் புருவத்துமையாள் கணவா விடில்கெடுவேன்
செல்வா திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(5)
கருவுற்றிருந்து உன் கழலே நினைந்தேன் கருப்புவியில்
தெருவில் புகுந்தேன், திகைத்த அடியேனைத் திகைப்பொழிவி
உருவில் திகழும் உமையாள் கணவா விடில்கெடுவேன்
திருவில்பொலி சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(6)
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி இழுப்பதன்முன்
இம்மையுன் தாள்எந்தன் நெஞ்சத்து எழுதிவை, ஈங்கிகழில்
அம்மை அடியேற்கருளுதி என்பதிங்கு ஆரறிவார்
செம்மைதரு சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(7)
விட்டார் புரங்களொரு நொடி வேவ ஒர் வெங்கணையால்
சுட்டாய்என் பாசத் தொடர்பறுத்து ஆண்டுகொள், தும்பி பம்பும்
மட்டார்குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும்
சிட்டா, திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(8)
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்
திகழ்ந்த திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(9)
தக்கார்வம் எய்திச் சமண் தவிர்ந்து, உந்தன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்திறம் அல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா, மிக வட மேருவென்னும்
திக்கா, திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே
(10)
பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள்
இறத்தால் ஒருவிரல் ஊன்றிட்டலற, இரங்கி ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய், கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய், திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page