திருக்கோவலூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கோவலூர்

(1)
படைகொள் கூற்றம் வந்து மெய்ப்பாசம் விட்ட போதின்கண்
இடைகொள்வார் எமக்கிலை, எழுகபோது நெஞ்சமே
குடைகொள் வேந்தன், மூதாதை குழகன், கோவலூர் தனுள்
விடையதேறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே
(2)
கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறும் கால்நிமிர்த்து
இரவலாழி நெஞ்சமே, இனியதெய்த  வேண்டில்நீ
குரவமேறி வண்டினம் குழலொடு யாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே
(3)
உள்ளத்தீரே போதுமின் உறுதியாவது அறிதிரேல்
அள்ளல் சேற்றில்  காலிட்டிங்கு அவலத்துள் அழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன் கோவலூர் தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே
(4)
கனைகொள் இருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனைய பலவும் மூப்பினோடு எய்திவந்து நலியாமுன்
பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்
வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே
(5)
உளங்கொள் போகம் உய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாள்தொறும் துயரலாழி நெஞ்சமே
வளங்கொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே
(6)
கேடுமூப்புச் சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும்
ஆடுபோல நரைகளாய் ஆக்கை போக்கதன்றியும்
கூடிநின்று பைம்பொழில் குழகன் கோவலூர் தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானம் சேர்துமே
(7)
உரையும் பாட்டும் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
நரையும் திரையும் கண்டெள்கி நகுவர் நமர்கள் ஆதலால்
வரைகொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விரைகொள் சீர் வெண்ணீற்றினான் வீரட்டானம் சேர்துமே
(8)
ஏதமிக்க மூப்பினோடிருமல் ஈளை என்றிவை
ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவதறிதிரேல்
போதில் வண்டு பண்செயும் பூந்தண் கோவலூர் தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானம் சேர்துமே
(9)
ஆறுபட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கொரு
கூறுபட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள்
நீறுபட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே
(10)
குறிகொள்ஆழி நெஞ்சமே, கூறை துவர் இட்டார்களும்
அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவது அறிதிரேல்
பொறிகொள் வண்டு பண்செயும் பூந்தண் கோவலூர்தனுள்
வெறிகொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே
(11)
கழியொடு உலவு கானல்சூழ் காழி ஞானசம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாசம் ஆதலால்
அழிவிலீர் கொண்டேத்துமின் அந்தண் கோவலூர் தனுள்
விழிகொள் பூதப்படையினான் வீரட்டானம் சேர்துமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page