(1)
செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன், இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வதென்னே கோவல் வீரட்டனீரே
(2)
தலை சுமந்திருகை நாற்றித் தரணிக்கே பொறையதாகி
நிலையிலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்தறுக்க மாட்டேன், வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே
(3)
வழித்தலைப் படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன் பாசமற்றுப் பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை, என் நினைந்திருக்க மாட்டேன்
கொழித்து வந்தலைக்கும் தெண்ணீர்க் கோவல் வீ ரட்டனீரே
(4)
சாற்றுவர் ஐவர் வந்து, சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை அறிவொன்றின்றிக்
கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல் வீரட்டனீரே
(5)
தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத்துயர்வு நீர்மைப்
படுத்திலேன், பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாதமுற்ற
அடுத்திலேன், சிந்தையார வார்வலித்தன்பு திண்ணம்
கொடுத்திலேன், கொடியவா நான் கோவல் வீரட்டனீரே
(6)
மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்கம்எய்து
நாச்செய்த நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க ஆற்றேன் கோவல் வீரட்டனீரே
(7)
படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கல்நின்றும்
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பியேத்தும்
இடையிலேன் என்செய்கேன் நான், இரப்பவர் தங்கட்கென்றும்
கொடையிலேன், கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே
(8)
பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்கமென்னும்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வதென்னே கோவல் வீரட்டனீரே
(9)
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றமென்னும்
கணத்திடை ஆட்டப் பட்டுக் காதலால் உன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன் கோவல் வீரட்டனீரே
(10)
விரிகடல் இலங்கைக் கோனை விரி கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றிப்
பரவிய பாடல் கேட்டுப் படை கொடுத்தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...