திருக்கோழம்பம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கோழம்பம்

(1)
நீற்றானை, நீள்சடை மேல் நிறைவுள்ளதோர்
ஆற்றானை, அழகமர் மென்முலையாளை ஓர்
கூற்றானைக், குளிர்பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை ஏத்துமின் நும்இடர்ஏகவே
(2)
மையான கண்டனை, மான்மறி ஏந்திய
கையானைக், கடிபொழில் கோழம்பம் மேவிய
செய்யானைத், தேனெய் பாலும் திகழ்ந்தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே
(3)
ஏதனை, ஏதமிலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனைக், கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை ஏத்துமின் நும்வினை நையவே
(4)
சடையானைத், தண்மலரான் சிரமேந்திய
விடையானை, வேதமும் வேள்வியுமாய நன்கு
உடையானைக், குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம்
உடையானை உள்குமின் உள்ளம் குளிரவே
(5)
காரானைக், கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத், தையலொர் பால் மகிழ்ந்தோங்கிய
சீரானைச், செறிபொழில் கோழம்பம் மேவிய
ஊரானை ஏத்துமின் நும்மிடர் ஒல்கவே
(6)
பண்டாலின் நீழலானைப், பரஞ்சோதியை
விண்டார்கள்தம் புரமூன்று உடனே வேவக்
கண்டானைக், கடிகமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானைக் கூறுமின் உள்ளம் குளிரவே
(7)
சொல்லானைச், சுடுகணையால் புர மூன்றெய்த
வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானைக்
கொல்ஆனை உரியானைக், கோழம்பம் மேவிய
நல்லானை ஏத்துமின் நும்இடர் நையவே
(8)
விற்றானை வல்லரக்கர் விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிரலால், கொடும் காலனைச்
செற்றானைச், சீர்திகழும் திருக்கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே
(9)
நெடியானோடு அயனறியா வகை நின்றதோர்
படியானைப், பண்டங்க வேடம் பயின்றானைக்
கடியாரும் கோழம்ப மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளம் குளிரவே
(10)
புத்தரும் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல, பீடுடைக்
கொத்தலர் தண்பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்துமின் அல்லல் அறுக்கவே
(11)
தண் புனலோங்கு தண்ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம்பந்தன் நம்பான்உறை
விண்பொழில் கோழம்பம் மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல்லார்க்கில்லை பாவமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page