(1)
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்போய்
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள்
கோழம்பத்துறை கூத்தன் குரைகழல்
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே
(2)
கயிலை நன்மலை ஆளும் கபாலியை
மயிலியல் மலைமாதின் மணாளனைக்
குயில்பயில் பொழில் கோழம்பம் மேயஎன்
உயிரினை நினைந்துள்ளம் உருகுமே
(3)
வாழும் பான்மையராகிய வான்செல்வம்
தாழும் பான்மையராகித் தம் வாயினால்
தாழம்பூ மணம் நாறிய தாழ்பொழில்
கோழம்பா எனக் கூடிய செல்வமே
(4)
பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூடலாக்கிடும் குன்றின் மணல்கொடு
கோடல் பூத்தலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கன்பு பட்டாளன்றே
(5)
தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரணத்தீருரி போர்த்தவன்
குளிர்கொள் நீர்வயல் கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை மேலும் நயந்ததே
(6)
நாதராவர் நமக்கும் பிறர்க்கும் தாம்
வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில்
கோதை மாதொடும் கோழம்பம் கோயில்கொண்டு
ஆதி பாதம் அடைய வல்லார்களே
(7)
முன்னை நான்செய்த பாவம் முதலறப்
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
அன்னமார் வயல் கோழம்பத்துள் அமர்
பின்னல் வார்சடையானைப் பிதற்றியே
(8)
ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்
கோழை மாரொடும் கூடிய குற்றமாம்
கூழை பாய்வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்தங்கிருந்ததே
(9)
அரவணைப் பயில் மாலயன் வந்தடி
பரவனைப், பரமாம் பரஞ்சோதியைக்
குரவனைக், குரவார் பொழில் கோழம்பத்து
உரவனை ஒருவர்க்கு உணர்வொண்ணுமே
(10)
சமர சூரபன்மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதை, நற்கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக்கன்புடைத் தொண்டர்கள்
அமரலோகமது ஆளுடையார்களே
(11)
துட்டனாகி மலையெடுத்து அஃதின்கீழ்ப்
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்தீசன் என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...