(1)
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நானுன் சேவடி ஏத்திலேன்
செந்நெலார் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே அடியேனை மறவலே
(2)
விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை
மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணுளார் பயிலும் திருக்கோளிலி
அண்ணலார் அடியே தொழுதுய்ம்மினே
(3)
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்களோர் ஐம்பதோடு ஆறெட்டும்
ஏழைமைப் பட்டிருந்து நீர் நையாதே
கோளிலி அரன் பாதமே கூறுமே
(4)
விழவினோசை ஒலியறாத் தண்பொழில்
பழகினார் வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கையான் அமரும் திருக்கோளிலிக்
குழகனார் திருப்பாதமே கூறுமே
(5)
மூலமாகிய மூவர்க்கும் மூர்த்தியைக்
காலனாகிய காலற்கும் காலனைக்
கோலமாம் பொழில்சூழ் திருக்கோளிலிச்
சூலபாணி தன் பாதம் தொழுமினே
(6)
காற்றனைக்; கடல் நஞ்சமுதுண்ட வெண்
நீற்றனை; நிமிர் புன்சடை அண்ணலை
ஆற்றனை; அமரும் திருக்கோளிலி
ஏற்றனார் அடியே தொழுதேத்துமே
(7)
வேதமாய விண்ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயிர்ஏத்தும் ஒருவனைக்
கோதி வண்டறையும் திருக்கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே
(8)
நீதியால் தொழுவார்கள் தலைவனை
வாதையான விடுக்கும் மணியினைக்
கோதி வண்டறையும் திருக்கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே
(9)
மாலும் நான்முகனாலும் அறிவொணாப்
பாலின் மென்மொழியாள் ஒரு பங்கனைக்
கோலமாம் பொழில்சூழ் திருக்கோளிலி
நீலகண்டனை நித்தல் நினைமினே
(10)
அரக்கனாய இலங்கையர் மன்னனை
நெருக்கியம் முடி பத்திறுத்தான் அவற்கு
இரக்கமாகியவன் திருக்கோளிலி
அருத்தியாய் அடியே தொழுதுய்ம்மினே