(1)
புற்றில் வாளரவார்த்த பிரானைப்
பூத நாதனைப், பாதமே தொழுவார்
பற்றுவான் துணை, எனக்கெளி வந்த
பாவ நாசனை, மேவரியானை
முற்றலார் திரிபுரம் ஒரு மூன்றும்
பொன்ற வென்றி மால்வரை அரி அம்பாக்
கொற்றவில் அங்கை ஏந்திய கோனைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(2)
அங்கம்ஆறும், மாமறைஒரு நான்கும்
ஆய நம்பனை, வேய்புரை தோளி
தங்கு மாதிரு உருவுடையானைத்
தழல்மதி சடைமேல் புனைந்தானை
வெங்கண் ஆனையின் ஈருரியானை
விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்குலாம் பொழில் குரவெறி கமழும்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(3)
பாட்டகத்திசையாகி நின்றானைப்
பத்தர் சித்தம் பரிவு இனியானை
நாட்டகத் தேவர் செய்கையுளானை
நட்டம் ஆடியை, நம்பெருமானைக்
காட்டகத்துறு புலிஉரியானைக்
கண்ணொர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்டகப் புனலார் செழும் கழனிக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(4)
ஆத்தம் எந்தனை ஆள் உகந்தானை
அமரர் நாதனைக், குமரனைப் பயந்த
வார்த் தயங்கிய முலைமட மானை
வைத்து, வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனைச், சிவனைச், செழுந்தேனைத்
தில்லை அம்பலத்துள் நிறைந்தாடும்
கூத்தனைக், குருமாமணி தன்னைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(5)
அன்று வந்தெனை அகலிடத்தவர் முன்
ஆளதாக என்று ஆவணம் காட்டி
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த
நித்திலத்திரள் தொத்தினை, முத்திக்கு
ஒன்றினான் தனை, உம்பர் பிரானை
உயரும் வல்லரணம் கெடச் சீறும்
குன்ற வில்லியை, மெல்லியலுடனே
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(6)
காற்றுத் தீப்புனலாகி நின்றானைக்
கடவுளைக், கொடு மால் விடையானை
நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை
நிரம்பு பல்கலையின் பொருளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்
போக்குவான் உயிர் நீக்கிடத், தாளால்
கூற்றைத் தீங்குசெய் குரை கழலானைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(7)
அன்று அயன்சிரம் அரிந்ததில் பலிகொண்டு
அமரருக்கருள் வெளிப்படுத்தானைத்
துன்று பைங்கழலில் சிலம்பார்த்த
சோதியைச், சுடர்போல் ஒளியானை
மின்தயங்கிய இடைமட மங்கை
மேவும் ஈசனை, வாசமா முடிமேல்
கொன்றையஞ் சடைக் குழகனை, அழகார்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(8)
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளம் ஈந்தவன், பாடலுக்கிரங்கும்
தன்மையாளனை, என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்றாடும்
அங்கணன் தனை, எண்கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உளானைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(9)
அரக்கன் ஆற்றலை அழித்துஅவன் பாட்டுக்கு
அன்றிரங்கிய வென்றியினானைப்
பரக்கும் பாரளித்து உண்டுகந்தவர்கள்
பரவியும் பணிதற்கு அரியானைச்
சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்த எம்மானைக்
குரக்கினம் குதிகொண்டு கள்வயல் சூழ்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(10)
கோடரம் பயில் சடையுடைக் கரும்பைக்
கோலக்காவுள் எம்மானை, மெய்ம்மானப்
பாடரங்குடி அடியவர் விரும்பப்
பயிலும் நாவல்ஆரூரன் வன்தொண்டன்
நாடிரங்கி முன்அறியும் அந்நெறியால்
நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காடரங்கென நடம்நவின்றான் பால்
கதியும் எய்துவர், பதியவர்க்கு அதுவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...