திருக்கோத்தும்பி

<– திருவாசகம்

(1)
பூவேறு கோனும், புரந்தரனும், பொற்பமைந்த
நாவேறு செல்வியும், நாரணனும், நான்மறையும்
மாவேறு சோதியும், வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(2)
நானார்? – என் உள்ளமார்? – ஞானங்களார்? – என்னை யாரறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல், மதிமயங்கி
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ

(3)
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்(பு) உள்நெக ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(4)
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(5)
அத்தேவர் தேவர் – அவர்தேவர் – என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(6)
வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போடிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(7)
சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(8)
ஒன்றாய் முளைத்தெழுந்தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(9)
கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென்றிவை இரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(10)
நோயுற்று மூத்துநான் நுந்து கன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(11)
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ்சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(12)
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேனதுள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(13)
நான் தனக்கன்பின்மை நானும் தானும் அறிவோம்
தானென்னை ஆட்கொண்டதெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோன்என்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

(14)
கருவாய் உலகினுக்கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ

(15)
நானும்என் சிந்தையும் நாயகனுக்கெவ்விடத்தோம்
தானுந் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(16)
உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான் – எம்பிரான் – என்னை வேறே!ஆட்
கொள்ளப் – பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(17)
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன் தன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(18)
தோலும் துகிலுங் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமுந் தொக்க வளையுமுடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

(19)
கள்வன் கடியன் கலதிஇவன் என்னாதே
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே
உள்ளத்துறுதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

(20)
பூமேல் அயனோடு மாலும் !புகலரிதென்
றேமாறி நிற்க, அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த
தீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page