(1)
நெற்றிமேல் கண்ணினானே, நீறுமெய் பூசினானே
கற்றைப்புன் சடையினானே, கடல்விடம் பருகினானே
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தினானே
குற்றமில் குணத்தினானே, கோடிகா உடைய கோவே
(2)
கடிகமழ் கொன்றையானே, கபாலம்கை ஏந்தினானே
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத்தானே
அடியிணை பரவ நாளும் அடியவர்க்கருள் செய்வானே
கொடியணி விழவதோவாக் கோடிகா உடைய கோவே
(3)
நீறுமெய் பூசினானே, நிழல்திகழ் மழுவினானே
ஏறுகந்தேறினானே, இருங்கடல் அமுதொப்பானே
ஆறுமோர் நான்குவேதம் அறம் உரைத்தருளினானே
கூறுமோர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே
(4)
காலனைக் காலால் செற்றன்று அருள்புரி கருணையானே
நீலமார் கண்டத்தானே, நீள்முடி அமரர் கோவே
ஞாலமாம் பெருமையானே, நளிரிளம் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா உடைய கோவே
(5)
பூணரவு ஆரத்தானே, புலியுரி அரையினானே
காணில் வெண் கோவணம்மும், கையிலோர் கபாலமேந்தி
ஊணுமோர் பிச்சையானே, உமையொரு பாகத்தானே
கோணல்வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே
(6)
கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பினானே
ஏழையேன் ஏழையேனான் என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்
கூழைஏறுடைய செல்வா கோடிகா உடைய கோவே
(7)
அழலுமிழ் அங்கையானே, அரிவையோர் பாகத்தானே
தழலுமிழ் அரவம்ஆர்த்துத், தலைதனில் பலிகொள்வானே
நிழலுமிழ் சோலை சூழ, நீள்வரி வண்டினங்கள்
குழலுமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே
(8)
ஏவடு சிலையினானே, புரமவை எரிசெய்தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே
ஆவடுதுறையுளானே, ஐவரால் ஆட்டப்பட்டேன்
கோவடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே
(9)
ஏற்றநீர்க் கங்கையானே, இருநிலம் தாவினானும்
நாற்றமா மலர்மேல்ஏறு நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கழலுரு ஆயினானே
கூற்றுக்கும் கூற்றதானாய் கோடிகா உடைய கோவே
(10)
பழகநான் அடிமை செய்வேன், பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே, அரக்கன் திண்தோள் அருவரை நெரிய ஊன்றும்
குழகனே, கோலமார்பா, கோடிகா உடைய கோவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...