திருக்கேதீஸ்வரம் – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கேதீஸ்வரம்

(சுந்தரர் தேவாரம்):

(1)
நத்தார்படை ஞானன், பசுவேறி, நனை கவுள்வாய்
மத்தம் மதயானை உரி போர்த்த மணவாளன்
பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல்
செத்தார் எலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே
(2)
சுடுவார்பொடி நீறும், நல துண்டப்பிறை, கீளும்
கடமார்களி யானையுரி அணிந்த கறைக்கண்டன்
படவேர்இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
திடமா உறைகின்றான் திருக்கேதீச்சரத்தானே
(3)
அங்கம் மொழியன்னார்அவர், அமரர் தொழுதேத்த
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கம் செய்த பிறைசூடினன், பாலாவியின் கரைமேல்
செங்கண் அரவசைத்தான் திருக்கேதீச்சரத்தானே
(4)
கரிய கறைக்கண்டன், நல்ல கண்மேல் ஒரு கண்ணான்
வரியசிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நன்னகருள்
பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேல்
தெரியும் மறைவல்லான் திருக்கேதீச்சரத்தானே
(5)
அங்கத்துறு நோய்கள் அடியார் மேல்ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே
(6)
வெய்ய வினையாய அடியார்மேல் ஒழித்தருளி
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பையேர்இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான் திருக்கேதீச்சரத்தானே
(7)
ஊனத்துறு நோய்கள் அடியார்மேல் ஒழித்தருளி
வானத்துறு மலியும்கடல் மாதோட்ட நன்னகரில்
பானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயிறணிந்தான் திருக்கேதீச்சரத்தானே
(8)
அட்டன், அழகாக அரை தன்மேல் அரவார்த்து
மட்டுண்டு வண்டாலும் பொழில் மாதோட்ட நன்னகரில்
பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல்
சிட்டன் நமைஆள்வான் திருக்கேதீச்சரத்தானே
(9)
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்ட நன்னகரில்
பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்
தேவன் எனைஆள்வான் திருக்கேதீச்சரத்தானே
(10)
கரையார் கடல்சூழ்ந்த கழி மாதோட்ட நன்னகருள்
சிறையார் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சரத்தானை
மறையார் புகழ்ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த
குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா கொடுவினையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page