திருக்கேதீஸ்வரம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கேதீஸ்வரம்

(சம்பந்தர் தேவாரம்):

(1)
விருது குன்றமா, மேருவில் நாண்அரவா, அனல் எரிஅம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றி நின்றுறை பதி, எந்நாளும்
கருதுகின்ற ஊர், கனைகடல் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்
கருதநின்ற கேதீச்சரம் கைதொழக் கடுவினை அடையாவே
(2)
பாடல் வீணையர், பலபல சரிதையர், எருதுகைத்தரு நட்டம்
ஆடல் பேணுவர், அமரர்கள் வேண்ட நஞ்சுண்ட இருள் கண்டத்தர்
ஈடமாவது இருங்கடல் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்
கேடிலாத கேதீச்சரம் தொழுதெழக் கெடும்இடர் வினைதானே
(3)
பெண்ணொர் பாகத்தர், பிறைதவழ் சடையினர், அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ணம் ஆதரித்தாடுவர், பாடுவர், அகந்தொறும் இடுபிச்சைக்கு
உண்ணலாவதோர் இச்சையில் உழல்பவர், உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவர்க்கருவினை அடையாவே
(4)
பொடிகொள் மேனியர், புலிஅதள் அரையினர், விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர், நூலினர், மறிகடல் மாதோட்டத்து
அடிகள் ஆதரித்திருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி
முடிகள் சாய்த்தடிபேண வல்லார் தம்மேல் மொய்த்தெழும் வினைபோமே
(5)
நல்லர் ஆற்றவும், ஞான நன்குடையர், தம்அடைந்தவர்க்கருள் ஈய
வல்லர், பார்மிசை வான் பிறப்பிறப்பிலர், மலிகடல் மாதோட்டத்து
எல்லையில் புகழ் எந்தை கேதீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத்தரனடி இணைதொழும் அன்பராம் அடியாரே
(6)
பேழை வார்சடைப் பெருந்திருமகள் தனைப் பொருந்த வைத்து, ஒருபாகம்
மாழை அங்கயற்கண்ணி பால்அருளிய பொருளினர், குடிவாழ்க்கை
வாழையம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப்பணிந்த நீள் மார்பர், கேதீச்சரம் பிரியாரே
(7)
பண்டு நால்வருக்கறம் உரைத்தருளிப் பல்லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார், கடலிடம் கைதொழக் காதலித்துறை கோயில்
வண்டு பண்செயும் மாமலர்ப் பொழில்மஞ்ஞை நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாள்தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சரம் அதுதானே
(8)
தென்னிலங்கையர் குலபதி மலை நலிந்தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்னலங்கெட அடர்த்தவற்கருள் செய்த தலைவனார், கடல்வாயப்
பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து
உன்னி அன்பொடடியவர் இறைஞ்சு கேதீச்சரத்துள்ளாரே
(9)
பூவுளானும், அப்பொரு கடல் வண்ணனும் புவி இடந்தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தகம் என்னாகும்
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் மன்னித்
தேவி தன்னொடும் திருந்து கேதீச்சரத்திருந்த எம் பெருமானே
(10)
புத்தராய்ச் சில புனை துகிலுடையவர், புறனுரைச் சமணாதர்
எத்தராகி நின்றுண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர், மாதோட்டத்து
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சரம் அடைமின்னே
(11)
மாடெலா மண முரசெனக் கடலினது ஒலிகவர் மாதோட்டத்து
ஆடலேறுடை அண்ணல் கேதீச்சரத்தடிகளை, அணிகாழி
நாடுளார்க்கிறை ஞானசம்பந்தன் சொல் நவின்றெழு பாமாலைப்
பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page