திருக்கேதாரம் – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கேதாரம்

(1)
வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல், பசிநோய் செய்த பறிதான்
தாழாது அறம் செய்ம்மின், தடங்கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான் திருக்கேதாரம் எனீரே
(2)
பறியே சுமந்துழல்வீர், பறி நரி கீறுவதறியீர்
குறிகூவிய கூற்றம்கொளு நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவால் நல நறுநீரொடு சோறு
கிறிபேசி நின்றிடுவார் தொழு கேதாரம் எனீரே
(3)
கொம்பைப் பிடித்தொருக் காலர்கள் இருக்கால் மலர் தூவி
நம்பன்நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்பக் களிற்றினமாய் நின்று சுனை நீர்களைத் தூவிச்
செம்பொற் பொடிசிந்தும் திருக்கேதாரம் எனீரே
(4)
உழக்கேயுண்டு படைத்தீட்டி வைத்திழப்பார்களும் சிலர்கள்
வழக்கேயெனில் பிழைக்கேம் என்பர் மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்
கிழக்கே சலமிடுவார் தொழு கேதாரம் எனீரே
(5)
வாளோடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே
நாளோடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி
ஆளாய் உய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
கீளோடரவசைத்தான் இடம் கேதாரம் எனீரே
(6)
தளிசாலைகள் தவமாவது தம்மைப் பெறிலன்றே
குளியீர்உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்காகக்
கிளிவாழை ஒண்கனி கீறியுண் கேதாரம் எனீரே
(7)
பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவேய் முழவதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக் கொண்டெறியக்
கிண்ணென்றிசை முரலும் திருக்கேதாரம் எனீரே
(8)
முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக் களிற்றினமாய் நின்று, சுனை நீர்களைத் தூவி
வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக்
கிளைக்க மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே
(9)
பொதியே சுமந்துழல்வீர், பொதி அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியே சென்று குழிவீழ்வதும் வினையால்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்க வரையடர்த்துக்
கெதிபேறு செய்திருந்தான் இடம் கேதாரம் எனீரே
(10)
நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்கடியான் அடித்தொண்டன்
தேவன் திருக்கேதாரத்தை ஊரன் உரைசெய்த
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்திருப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page