(1)
தொண்டர்அஞ்சு களிறும் அடக்கிச், சுரும்பார் மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ள,வரிக்
கெண்டை பாயச் சுனைநீல மொட்டலரும் கேதாரமே
(2)
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேத நான்கும் பதினெட்டொடாறும் விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளும் கேதாரமே
(3)
முந்தி வந்து புரோதாய மூழ்கி முனிகள்பலர்
எந்தை பெம்மான் என நின்றிறைஞ்சும் இடம்என்பரால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்க, பூக்
கெந்த நாறக் கிளரும்சடை எந்தை கேதாரமே
(4)
உள்ளமிக்கார், குதிரை முகத்தார், ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும் இடம்என்பரால்
பிள்ளை துள்ளிக் கிள்ளை பயில்வ கேட்டுப் பிரியாது போய்க்
கிள்ளை ஏனல்கதிர் கொணர்ந்து வாய்ப்பெய்யும் கேதாரமே
(5)
ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின்ஒண் பொருள்களால்
வாழிஎந்தை என வந்திறைஞ்சும் இடம்என்பரால்
மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேறிய
கேழல் பூழ்தி கிளைக்க மணிசிந்தும் கேதாரமே
(6)
நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி, நீள்வரை தன்மேல்
தேறுசிந்தை உடையார்கள் சேரும் இடம்என்பரால்
ஏறிமாவின் கனியும், பலாவின் இருஞ்சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோடு உண்டுகளும் கேதாரமே
(7)
மடந்தை பாகத்தடக்கி, மறையோதி, வானோர் தொழத்
தொடர்ந்த நம் மேல்வினை தீர்க்க நின்றார்க்கிடம் என்பரால்
உடைந்த காற்றுக்குயர் வேங்கை பூத்துதிரக் கல்லறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமாமுகம் செய்யும் கேதாரமே
(8)
அரவமுந்நீர் அணிஇலங்கைக் கோனை அருவரை தனால்
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கிடம் என்பரால்
குரவம் கோங்கம் குளிர்பிண்டி ஞாழல் சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யும் கேதாரமே
(9)
ஆழ்ந்து காணார், உயர்ந்தெய்த கில்லார், அலமந்தவர்
தாழ்ந்து தந்தம் முடிசாய நின்றார்க்கிடமென்பரால்
வீழ்ந்து செற்று நிழற்கிரங்கும் வேழத்தின் வெண் மருப்பினைக்
கீழ்ந்து சிங்கம் குருகுண்ண முத்துதிரும் கேதாரமே
(10)
கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள், மாசுடம்பினர்
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்தவொண்ணா இடம்என்பரால்
அடுக்க நின்ற அறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக்
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே
(11)
வாய்ந்த செந்நெல் விளைகழனி மல்கும் வயற்காழியான்
ஏய்ந்தநீர்க் கோட்டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர்
வேந்தராகி உலகாண்டு வீடுகதி பெறுவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...