திருக்கூடலையாற்றூர்:

<– நடு நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 

சுந்தரர் தேவாரம்:

(1)
வடியுடை மழுவேந்தி மதகரிஉரி போர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
(2)
வையக முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையிள அரவல்குல் பாவையொடும் உடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
(3)
ஊர்தொறும் வெண்தலை கொண்டுண் பலிஇடும் என்று
வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
(4)
சந்தணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்தணவும் விரலாள் பாவையொடும் உடனே
கொந்தணவும் பொழில்சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே
(5)
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழநற்
சோதியதுருவாகிச் சுரிகுழல் உமையோடும்
கோதிய வண்டறையும் கூடலையாற்றூரில்
ஆதி இவ்வழி போந்த அதிசயம் அறியேனே
(6)
வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொடும் உடனே
கொத்தலரும் பொழில்சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
(7)
மழைநுழை மதியமொடு வாளரவும் சடைமேல்
இழைநுழை துகிலல்குல் ஏந்திழையாளோடும்
குழையணி திகழ்சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
(8)
மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க் கணமும் சூழக்
குறள்படை அதனோடும் கூடலையாற்றூரில்
அறவன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
(9)
வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள் பாவையொடும் உடனே
கோலமதுருவாகிக் கூடலையாற்றூரில்
ஆலன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே
(10)
கூடலையாற்றூரில் கொடியிடை அவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை பற்றறுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page