(1)
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார் அடியிணைக்கீழ்
ஓதிய வேத நாவர் உணருமாறு உணரலுற்றார்
சோதியுள் சுடராய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார், பல்பூக்
கோதி வண்டறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே
(2)
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்றதென்று தருமராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே
(3)
தழைத்ததோர் ஆத்தியின்கீழ் தாபர மணலால் கூப்பி
அழைத்தங்கே ஆவின்பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு
பிழைத்த தன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்ட னாரே
(4)
சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானும்ஆகக்
கலந்தநீர்க் காவிரீசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே
(5)
ஏறுடன் ஏழடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறுடைச் சடையினானை அர்ச்சித்தான் அடியிணைக்கீழ்
வேறுமோர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை ஈண்டக்
கூறுமோர் ஆழிஈந்தார் குறுக்கை வீரட்டனாரே
(6)
கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணும் சாக்கியனார்
நெல்லினார் சோறுணாமே நீள் விசும்பாள வைத்தார்
எல்லியாங்கெரி கையேந்தி எழில்திகழ் நட்டமாடிக்
கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே
(7)
காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம்
தோல்பெரும் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசமாட்டித்
தீப்பெரும் கண்கள் செய்ய குருதி நீரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே
(8)
நிறைமறைக் காடுதன்னில் நீண்டெரி தீபம் தன்னைக்
கறை நிறத்தெலி தன்மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம்எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே
(9)
அணங்குமை பாகமாக அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து, நல்லரும் தவத்த
கணம்புல்லர்க்கருள்கள் செய்து காதலாம் அடியார்க்கென்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே
(10)
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்நரம்பால் வேதகீதங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாள்நாள் குறுக்கை வீரட்டனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...