திருக்காளத்தி – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருக்காளத்தி

(1)
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல் விடம்
தானமுது செய்தருள் புரிந்த சிவன் மேவுமலை தன்னை வினவில்
ஏனமிள மானினொடு கிள்ளை தினை கொள்ள எழிலார் கவணினால்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகு காளத்தி மலையே
(2)
முதுசின வில் அவுணர்புர மூன்றுமொரு நொடிவரையின் மூள எரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னை வினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழில் ஏனம்உழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவு காளத்தி மலையே
(3)
வல்லைவரு காளியை வகுத்து வலியாகிமிகு தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி பருங்கிமிக உண்டவை நெருங்கி இனமாய்க்
கல்லதிர நின்று கருமந்தி விளையாடு காளத்தி மலையே
(4)
வேயனைய தோளுமையொர் பாகம்அதுவாக, விடையேறி, சடைமேல்
தூயமதி சூடி, சுடுகாடில் நடமாடி மலை தன்னை வினவில்
வாய்கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம்
காய் கணையினால் இடந்தீசனடி கூடு காளத்தி மலையே
(5)
மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபொல்அலறக்
கொலை செய்துமைஅஞ்ச உரிபோர்த்த சிவன்மேவு மலைகூறி வினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி இழியவயல் நிலவு முதுவேய்
கலகலென ஒளிகொள்கதிர் முத்தமவை சிந்து காளத்தி மலையே
(6)
பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவ முயன்ற பணிகண்டு
ஆரருள் புரிந்தலைகொள் கங்கை சடையேற்ற அரன் மலையை வினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்த விறகில்
காரகில் இரும்புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே
(7)
ஆரும் எதிராத வலியாகிய சலந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன் இருந்த மலை தன்னை வினவில்
ஊருமரவம் ஒளிகொள் மாமணி உமிழ்ந்தவை உலாவி வரலால்
காரிருள் கடிந்து கனகம்மென விளங்கு காளத்தி மலையே
(8)
எரியனைய சுரிமயிர் இராவணனை ஈடழிய எழில்கொள் விரலால்
பெரியவரை ஊன்றியருள் செய்த சிவன் மேவுமலை பெற்றி வினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை ஊடுவரலால்
கரியினொடு வரியுழுவை அரியினமும் வெருவு காளத்தி மலையே
(9)
இனதளவில் இவனதடி இணையும் முடி அறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகளசிவன் மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரு மணம்புணரு நாள்
கனகமென மலர்கள்அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே
(10)
நின்று கவளம் பல கொள்கையரொடு, மெய்யிலிடு போர்வை அவரும்
நன்றியறியாத வகை நின்றசிவன் மேவுமலை நாடி வினவில்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்று விளையாடு காளத்தி மலையே
(11)
காடதிடமாக நடமாடு சிவன் மேவு காளத்தி மலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவய மன்னு தலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம்பந்தன் உரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page