திருக்கழுக்குன்றம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கழுக்குன்றம்

(1)
தோடுடையான் ஒரு காதில் தூய குழைதாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும்
நாடுடையான், நள்ளிருளே மாநடமாடும்
காடுடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே
(2)
கேண வல்லான் கேழல் வெண்கொம்பு, குறளாமை
பூண வல்லான், புரிசடைமேலொர் புனல் கொன்றை
பேண வல்லான், பெண்மகள் தன்னை ஒருபாகம்
காண வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே
(3)
தேனகத்தார் வண்டதுண்ட திகழ் கொன்றை
தான்நகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல் செய்கோயில் கழுக்குன்றே
(4)
துணையல் செய்தான் தூய வண்டு யாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா இலங்கெயில் மூன்றும் எரியுண்ணக்
கணையல் செய்தான், காதல்செய் கோயில் கழுக்குன்றே
(5)
பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய்யுடையான்; வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல், மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே
(6)
வெள்ளமெல்லாம் விரிசடை மேலோர் விரிகொன்றை
கொள்ள வல்லான், குரை கழலேத்தும் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கி நின்றாங்கே உடனாடும்
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே
(7)
(8)
ஆதல் செய்தான், அரக்கர்தம் கோனை அருவரையின்
நோதல் செய்தான், நொடி வரையின்கண் விரலூன்றிப்
பேர்தல் செய்தான், பெண்மகள் தன்னோடு ஒருபாகம்
காதல் செய்தான், காதல்செய் கோயில் கழுக்குன்றே
(9)
இடந்த பெம்மான் ஏனமதாயும் அனமாயும்
தொடர்ந்த பெம்மான், தூமதிசூடி வரையார்தம்
மடந்தை பெம்மான், வார் கழலோச்சிக் காலனைக்
கடந்த பெம்மான், காதல்செய் கோயில் கழுக்குன்றே
(10)
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே
பாய நின்றான், பலர் புகழ்ந்தேத்த உலகெல்லாம்
சாய நின்றான், வன்சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான், காதல்செய் கோயில் கழுக்குன்றே
(11)
கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்இயல்பால் பாடிய பத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page