(1)
செடியேன் தீவினையில் தடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனாது ஒழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலையதே
(2)
எங்கேனும் இருந்துன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்தென்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டெனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே
(3)
ஒறுத்தாய், நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய், வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய், தண்கழனிக் கழிப்பாலை மேயானே
(4)
சுரும்பார் விண்ட மலரவை தூவித் தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்தடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒரு தெய்வம் என்மனத்தால்
கரும்பாரும் கழனிக் கழிப்பாலை மேயானே
(5)
ஒழிப்பாய் என்வினையை, உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய், விலைஆவணம் உடையாய்
சுழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகில்
கழிப்பாலை மருவும் கனலேந்து கையானே
(6)
ஆர்த்தாய் ஆடரவை, அரைஆர் புலியதள் மேல்
போர்த்தாய் யானையின் தோல் உரிவை புலால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்
பார்த்தாய், நுற்கிடமாம் பழியில் கழிப்பாலையதே
(7)
பருத்தாள் வன்பகட்டைப் படமாக முன்பற்றி அதள்
உரித்தாய் யானையின்தோல், உலகம் தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும், இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா, தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
(8)
படைத்தாய் ஞாலமெலாம், படர் புன்சடை எம் பரமா
உடைத்தாய் வேள்வி தனை, உமையாளைஒர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் தலை பத்தொடு தோள்நெரியக்
கடற்சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே
(9)
பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்கேஒத்த தேவர்பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவரியான்
மையார் கண்ணியொடும் மகிழ்வான் கழிப்பாலையதே
(10)
பழிசேரில் புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வ மல்கும் கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகாள்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...