திருக்கழிப்பாலை – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருக்கழிப்பாலை

(1)
வெந்த குங்கிலியப் புகை விம்மவே
கந்த நின்றுலவும் கழிப்பாலையார்
அந்தமும் அளவும் அறியாததோர்
சந்தமாலவர் மேவிய சாந்தமே
(2)
வானிலங்க விளங்கும் இளம்பிறை
தானலங்கல் உகந்த தலைவனார்
கானிலம் கவரும் கழிப்பாலையார்
மானலம் மடநோக்கு உடையாளொடே
(3)
கொடிகொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடிகொள் மார்பினில் பூண்டதொர் ஆமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள்
அடிகள் செய்வன ஆர்க்கறிவொண்ணுமே
(4)
பண்ணலம் பட வண்டறை கொன்றையின்
தண்அலங்கல் உகந்த தலைவனார்
கண்ணலம் கவரும் கழிப்பாலையுள்
அண்ணல்எம் கடவுள் அவனல்லனே
(5)
ஏரினார் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்
காரினார் பொழில்சூழ் கழிப்பாலைஎம்
சீரினார் கழலே சிந்தை செய்ம்மினே
(6)
துள்ளு மான்மறி அங்கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார் இடு வெண்தலையில் பலி
கள்வனார் உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினையாயின ஓயுமே
(7)
மண்ணினார் மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர் இனிது ஏத்துமின், பாகமும்
பெண்ணினார்; பிறை நெற்றியொடு உற்றமுக்
கண்ணினார் உறையும் கழிப்பாலையே
(8)
இலங்கை மன்னனை ஈரைந்திரட்டி தோள்
துலங்க ஊன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துலவும் கழிப்பாலையை
வலங்கொள்வார் வினையாயின மாயுமே
(9)
ஆட்சியால் அலரானொடு மாலுமாய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே
(10)
செய்ய நுண்துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மையெனோ?, கழிப்பாலைஎம்
ஐயன் சேவடி அடைந்து உய்ம்மினே
(11)
அந்தண் காழி அருமறை !ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுலகாடல் முறைமையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page