திருக்கழிப்பாலை – அப்பர் தேவாரம் (2):

<– திருக்கழிப்பாலை

(1)
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையில் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(2)
விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்; கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(3)
வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார்
ஆமனெய் ஆட வைத்தார்; அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(4)
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேரழல் உண்ண வைத்தார்
பரியதீ வண்ணராகிப் பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(5)
கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறைபுனல் சடையில் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார்; கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(6)
உட்டங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(7)
ஊனப்பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார்
வானப் பேராறு வைத்தார்; வைகுந்தற்காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்; கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(8)
கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பரும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்; கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(9)
சதுர்முகன் தானும், மாலும், தம்மிலே இகலக் கண்டு
எதிர்முகம் இன்றி நின்ற எரியுரு அதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் தன்னைக் காலனில் பிதிரவைத்தார்
கதிர்முகம் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(10)
மாலினாள் நங்கையஞ்ச மதிஇலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினால் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page