(1)
ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து
ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார், தாமரையினார்
கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(2)
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறையார்ந்த சடைமுடி மேல் பாம்பு கங்கை
பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார், பெரிய நஞ்சுக்
கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மறையார்ந்த வாய்மொழியால் மாய யாக்கை
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(3)
நெளிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை
நினைமின்கள் நித்தலும், நேரிழையாளாய
ஒளிவண்டார் கருங்குழலி உமையாள் தன்னை
ஒருபாகத்தமர்ந்து, அடியார் உள்கியேத்தக்
களிவண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(4)
பொடிநாறு மேனியர்; பூதிப் பையர்
புலித்தோலர்; பொங்கரவர்; பூண நூலர்
அடிநூறு கமலத்தர்; ஆரூர் ஆதி
ஆனஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மடிநாறு மேனி இம்மாயம் நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(5)
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவியெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடல்ஏழானாய்
இறையானாய் எம்இறையே என்று நிற்கும்
கண்ணானாய் காரானாய் பாரும்ஆனாய்
கழிப்பாலை உள்ளுறையும் கபாலப்பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(6)
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த
விரிகதிரான் எரிசுடரான் விண்ணுமாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்அப்பக் கண்டுகந்தார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(7)
பிணம்புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம்புல்கு சூலத்தர்; நீல கண்டர்
எண்தோளர்; எண்ணிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்துகந்தார்; காஞ்சியுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(8)
இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்தமான
தியம்பகன்; திரிசூலத்தன்; நகையன்
கயல்பாயும் கண்டல்சூழ் உண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(9)
செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி என்றெழுவார் சிந்தை உள்ளால்
உற்றதோர் நோய்களைந்து, இவ்வுலகமெல்லாம்
காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாதெல்லாம்
கற்றதோர் நூலினன்; களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
(10)
பொருதலங்கல் நீள்முடியான்; போரரக்கன்
புட்பகந்தான் பொருப்பின் மீது ஓடாதாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்திடுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறஞ்சினோடு
கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதல்அங்க மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...