திருக்கலிக்காமூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மடல் வரையின் மதுவிம்மு சோலை வயல் சூழ்ந்தழகாரும்
கடல்வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்
உடல் வரையின் உயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
இடர் தொடரா, வினையான சிந்தும், இறைவன் அருளாமே
(2)
மைவரை போல் திரையோடு கூடிப் புடையே மலிந்தோதம்
கைவரையால் வளர் சங்கமெங்கும் மிகுக்கும் கலிக்காமூர்
மெய்வரையான் மகள் பாகன் தன்னை விரும்ப, உடல்வாழும்
ஐவரை ஆசறுத்தாளும் என்பர் அதுவும் சரதமே
(3)
தூவிய நீர்மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுதேத்தக்
காவியின் நேர்விழி மாதர் என்றும்  கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே
(4)
குன்றுகள் போல்திரை உந்தி அந்தண் மணியார் தர, மேதி
கன்றுடன் புல்கி ஆயம் மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடியேத்தி
நின்றுணர்வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே
(5)
வானிடை வாண்மதி மாடம்தீண்ட, மருங்கே கடலோதம்
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துகந்தாடினானை, அமரர் தொழுதேத்த
நானடைவாம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே
(6)
துறைவளர் கேதகைமீது வாசம்சூழ் வான்மலி தென்றல்
கறை வளரும் கடலோதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்
மறை வளரும் பொருள் ஆயினானை, மனத்தால் நினைந்தேத்த
நிறை வளரும், புகழ் எய்தும், வாதை நினையா, வினைபோமே
(7)
கோலநன் மேனியின் மாதர், மைந்தர் கொணர் மங்கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம்வழுவாது இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமிடாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே
(8)
ஊரரவம் தலை நீள்முடியான், ஒலிநீர் உலகாண்டு
காரரவக் கடல்சூழ வாழும் பதியாம் கலிக்காமூர்
தேரர அல்குலம் பேதை அஞ்சத், திருந்து வரை பேர்த்தான்
ஆரரவம் பட வைத்த பாதம் உடையான் இடமாமே
(9)
அருவரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரையான் மகள் பாகன் தன்னை உணர்வால் தொழுதேத்தத்
திருமருவும், சிதைவில்லைச் செம்மைத் தேசுண்டவர் பாலே
(10)
மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினைபோமே
(11)
ஆழியுள் நஞ்சமுதார உண்டு அன்றமரர்க்கமுதுண்ண
ஊழிதொறும் உளரா அளித்தான், உலகத்துயர்கின்ற
காழியுண் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page