(1)
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவை போர்த்து உமைவெருவக் கண்டானைக்
கருப்பறியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடும்
கொகுடிக் கோயில்
எம்மானை, மனத்தினால் நினைந்த போது அவர்நமக்கு இனியவாறே
(2)
நீற்றாரும் மேனியராய், நினைவார்தம் உள்ளத்தே
நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்
கருப்பறியலூர்க்
கூற்றானை, கூற்றுதைத்துக் கோல் வளையாள் அவளோடும்
கொகுடிக் கோயில்
ஏற்றானை, மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு இனியவாறே
(3)
முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து
மூன்று போதும்
கட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும் அந்தணர்தம்
கருப்பறியலூர்க்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக், குழகனைக்
கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோது அவர்நமக்கு இனியவாறே
(4)
விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்
கருந்தாள வாழைமேல் செங்கனிகள் தேன்சொரியும்
கருப்பறியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள் அவளோடும்
கொகுடிக் கோயில்
இருந்தானை, மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே
(5)
பொடியேறு திருமேனிப் பெருமானைப், பொங்கரவக்
கச்சையானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளும்
கருப்பறியலூர்க்
கொடியேறி வண்டினமும் தண்தேனும் பண்செய்யும்
கொகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே
(6)
பொய்யாத வாய்மையால் பொடிபூசிப் போற்றிசைத்துப்
பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தம்
கருப்பறியலூர்க்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும்
கொகுடிக் கோயில்
ஐயனை, என் மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே
(7)
செடிகொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்தொழியச்
சிந்தை செய்மின்
கடிகொள் பூந்தட மண்டிக் கருமேதி கண்படுக்கும்
கருப்பறியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் அவளோடும்
கொகுடிக் கோயில்
அடிகளை, என் மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே
(8)
பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும்
பாடியாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்தோளன் முக்கண்ணன்
கருப்பறியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவல் ஒழியாத
கொகுடிக் கோயில்
உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர்நமக்கு
இனியவாறே
(9)
சங்கேந்து கையானும், தாமரையின் மேலானும்
தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை, விடையானைக்
கருப்பறியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்கும்
கொகுடிக் கோயில்
எங்கோனை, மனத்தினால் நினைந்த போது அவர்நமக்கு
இனியவாறே.
(10)
பண்டாழின் இசைமுரலப் பன்னாளும் பாவித்துப்
பாடியாடிக்
கண்டார்தம் கண்குளிரும் களிக்க முகம் பூஞ்சோலைக்
கருப்பறியலூர்க்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறங்கூறும்
கொகுடிக் கோயில்
எண்தோள்எம் பெருமானை நினைந்த போது அவர்நமக்கு
இனியவாறே.
(11)
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் இடர்தீர்க்கும்
கருப்பறியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கும் மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை, மனத்தினால் அன்புசெய்து
இன்பமெய்தி
மலைமலிந்த தோல் ஊரன் வனப்பகைஅப்பன் உரைத்த
வண்தமிழ்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...