(1)
சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே
(2)
வண்டணை செய் கொன்றையது வார்சடைகண் மேலே
கொண்டணை செய் கோலமது கோள்அரவினோடும்
விண்டணை செய் மும்மதிலும் வீழ்தர ஓர்அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே
(3)
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்
போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதன்என நள்ளிருள் முனாடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே
(4)
மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே
(5)
ஒருத்தி உ மையோடும் ஒரு பாகமதுவாய
நிருத்தனவன் நீதியவன், நித்த நெறியாய
விருத்தனவன், வேதமென அங்கம் அவையோதும்
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே
(6)
விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவ எரிகாலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே
(7)
ஆதிஅடியைப் பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே
(8)
வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர் செயும்தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே
(9)
பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர் சடைமேல் மிசை உகந்தவளை வைத்து
நிரந்தர நிரந்திருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே
(10)
அற்ற மறையா அமணர், ஆதமிலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டுக்
குற்றமறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே
(11)
நலந்தரு புனற்புகலி ஞானசம்பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று
வலந்தரும் அவர்க்குவினை வாடல் எளிதாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...