(1)
குருகாம் வயிரமாம், கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம், கோளே தானாம்
பருகா அமுதமாம், பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம், பாட்டில் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவில் குரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(2)
வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம், அடியார்க்கோர் பாங்கனுமாம்
பால் நிறமுமாம், பரஞ்சோதி தானாம்
தொத்தாம், அமரர்கணம் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்தாம், அடியேற்கும் காணா காட்டும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(3)
பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாம், கோல்வளையாள் கூறனாகும்
கொண்ட சமயத்தார் தேவனாகி
ஏத்தாதார்க்கென்றும் இடரே துன்பம்
ஈவானாம், என்நெஞ்சத்துள்ளே நின்று
காத்தானாம் காலன் அடையா வண்ணம்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(4)
இரவனாம் எல்லி நடமாடியாம்
எண்திசைக்கும் தேவனாம், என்னுளானாம்
அரவனாம், அல்லல் அறுப்பானுமாம்
ஆகாச மூர்த்தியாம், ஆனேறேறும்
குரவனாம், கூற்றை உதைத்தான் தானாம்
கூறாத வஞ்சக் குயலர்க்கென்றும்
கரவனாம், காட்சிக்கெளியானுமாம்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(5)
படைத்தானாம், பாரை இடந்தானாகும்
பரிசொன்றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி ஒருக்கி நின்று
அடைத்தானாம், சூலம் மழுவோர் நாகம்
அசைத்தானாம், ஆனேறொன்று ஊர்ந்தானாகும்
கடைத்தானாம் கள்ளம் அறிவார் நெஞ்சில்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(6)
மூலனாம், மூர்த்தியாம், முன்னே தானாம்
மூவாத மேனி முக்கண்ணினானாம்
சீலனாம், சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும்
செல்வனாம், செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்கனாகும்
மன்றாடியாம், வானோர் தங்கட்கெல்லாம்
காலனாம், காலனைக் காய்ந்தானாகும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(7)
அரைசேர் அரவனாம், ஆலத்தானாம்
ஆதிரை நாளானாம், அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்களானாம்
தீவினை நாசனென் சிந்தையானாம்
உரைசேர் உலகத்தார் உள்ளானுமாம்
உமையாளோர் பாகனாம், ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை உண்டானாகும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(8)
துடியாம், துடியின் முழக்கம் தானாம்
சொல்லுவார் சொல்லெல்லாம் சோதிப்பானாம்
படிதானாம், பாவம் அறுப்பானாகும்
பால் நீற்றனாம், பரஞ்சோதி தானாம்
கொடியானாம் கூற்றை உதைத்தானாகும்
கூறாத வஞ்சக் குயலர்க்கென்றும்
கடியானாம், காட்சிக்கரியானாகும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(9)
விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம்
பட்டுருவ மால் யானைத்தோல் கீண்டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம், எண்தோளானாம்
என்னுச்சி மேலானாம், எம்பிரானாம்
கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(10)
பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளானாகி
உள்ளிருந்தங்கு உள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமுட்டும் திண்மையானாம்
அறுத்திருந்த கையானாம் அந்தார்அல்லி
இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
(11)
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி உடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டானாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கியங்கே
ஆகாய மந்திரமும் ஆனானாகும்
கறுத்தானாம் காலனைக் காலால் வீழக்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...