(1)
தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான் மலை உத்தமனே
(2)
ஆனை உரித்தபகை அடியேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலம்செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே
(3)
மந்திரம் ஒன்றறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழகானை அருள்புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்தான் மலை உத்தமனே
(4)
வாழ்வை உகந்தநெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப்பட்டு
ஆழம் உகந்தஎன்னை அதுமாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே
(5)
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே
(6)
அஞ்சினை ஒன்றிநின்று அலர் கொண்டடி சேர்வறியா
வஞ்சனை என்மனமே வைகி வான நன்னாடர் முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பரமல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே
(7)
நிலைகெட விண்ணதிர நிலமெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழியே வருவேன்எதிரே
அலைகடலால் அரையன் அலர்கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே
(8)
அரவொலி ஆகமங்கள் அறிவார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெலாம் வந்தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி தந்தெனக்கேறுவதோர்
சிரமலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே
(9)
இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே
(10)
ஊழிதொறூழி முற்றும் உயர்பொன் நொடித்தான் மலையைச்
சூழிசை இன்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்தமிழால் இசைந்தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கறிவிப்பதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...