திருக்கயிலை – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருக்கயிலை

(1)
வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளும் மகிழ்வர்
ஆளும்அவர் வேளநகர் போள்அயில கோள களிறாளி வரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர் பொன்
காளமுகில் மூளும்இருள் கீளவிரி தாள கயிலாய மலையே
(2)
புற்றரவு பற்றியகை, நெற்றியது மற்றொரு கண், ஒற்றை விடையன்
செற்றதெயில், உற்றதுமை, அற்றவர்கள் நற்துணைவன் உற்ற நகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமிலதெற்றென வினாய்க்
கற்றவர்கள் சொற்தொகையின் முற்றும்ஒளி பெற்ற கயிலாய மலையே
(3)
சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர் தூய்
எங்கள் வினை சங்கையவை இங்ககல அங்கமொழி எங்கும்உளவாய்த்
திங்களிருள் நொங்கஒளி வீங்கிமிளிர் தொங்கலொடு தங்கஅயலே
கங்கையொடு பொங்குசடை எங்கள்இறை தங்கு கயிலாய மலையே
(4)
முடியசடை பிடியதொரு வடியமழு உடையர், செடியுடைய தலையில்
வெடிய வினை கொடியர் கெட, இடு சில்பலி நொடியமகிழ் அடிகள் இடமாம்
கொடிய குரல் உடையவிடை கடியதுடி அடியினொடும் இடியின் அதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியஅதர் அடிகொள் கயிலாய மலையே
(5)
குடங்கையின் நுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொள் அரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கனதிடம், தண்முகில் போய்த்
தடங்கடல் தொடர்ந்துடன் நுடங்குவ இடங்கொள மிடைந்த குரலால்
கடுங்கலின் முடங்களை நுடங்கரவொடுங்கு கயிலாய மலையே
(6)
ஏதமில பூதமொடு கோதைதுணை ஆதிமுதல் வேத விகிர்தன்
கீதமொடு நீதிபல ஓதிமறவாது பயில்நாதன் நகர்தான்
தாதுபொதி போதுவிட ஊதுசிறை மீதுதுளி கூதல்நலியக்
காதல்மிகு சோதிகிளர் மாதுபயில் கோது கயிலாய மலையே
(7)
சென்றுபல வென்றுலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றமரர் என்றும் இறைவன் தனடி சென்று பணிகின்ற நகர்தான்
துன்றுமலர் பொன் திகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்று கமழக்
கன்றுபிடி துன்றுகளிறு என்றிவைமுன் நின்ற கயிலாய மலையே
(8)
மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்த களிறின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன்உணராது
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்த விரலால்
கருத்தில ஒருத்தனை எருத்திற நெரித்த கயிலாய மலையே
(9)
பரியதிரை எரியபுனல் வரியபுலி உரியதுடை பரிசை உடையான்
வரியவளை அரியகணி உருவினொடு புரிவினவர் பிரிவில் நகர்தான்
பெரியஎரி உருவமது தெரியஉரு பரிவுதரும் அருமையதனால்
கரியவனும் அரியமறை புரியவனும் மருவு கயிலாய மலையே
(10)
அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை கொண்டஇறை துண்டமதியோடு
இண்டைபுனை உண்டசடை முண்டதர சண்டஇருள் கண்டர் இடமாம்
குண்டமண வண்டர்அவர் மண்டை கையில் உண்டுளறி மிண்டுசமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே
(11)
அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை சந்தனமொடுந்தி அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாய மலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன்உரை சிந்தைசெய வந்தவினை நைந்து பரலோகம் எளிதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page