(1)
வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மினீர், அருள் வேண்டுவீர்
கனைவிலார் புனல் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன்
தனமுனே தனக்கின்மையோ, தமராயினார் அண்டம்ஆளத், தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப்பாடி இவ்வையமாப் பலி தேர்ந்ததே
(2)
உள்ளவாறெனக்குரை செய்மின், உயர்வாய மாதவம் பேணுவீர்
கள்ளவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்துறை காதலான்
பிள்ளை வான்பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும், பெரு நீரொலி
வெள்ளம் தாங்கியதென் கொலோ, மிகு மங்கையாள் உடனாகவே
(3)
அடியராயினீர் சொல்லுமின், அறிகின்றிலேன் அரன் செய்கையைப்
படியெலாம் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய் முதலாய் இவ்வைய முழுதுமாய் அழகாயதோர்
பொடியதார் திருமார்பினில் புரிநூலும் பூண்டெழு பொற்பதே
(4)
பழைய தொண்டர்கள் பகருமின் பலவாய வேதியன் பான்மையைக்
கழையுலாம் புனல்மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழையொர் காதினில் பெய்துகந்து, ஒரு குன்றின் மங்கை வெருவுறப்
புழைநெடுங்கை நன்மா உரித்தது போர்த்துகந்த பொலிவதே
(5)
விரவிலாதுமைக் கேட்கின்றேன், அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்புமின்
கரையெலாம் திரைமண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவமொந்தை முழா ஒலிக்க, முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
பரவு வானவர்க்காக வார்கடல் நஞ்சமுண்ட பரிசதே
(6)
இயலுமாறெனக்கு இயம்புமின், இறைவன்னுமாய் நிறை செய்கையைக்
கயல்நெடுங் கண்ணினார்கள் தாம்பொலி கண்டியூர்உறை வீரட்டன்
புயல் பொழிந்திழி வானுளோர்களுக்காக அன்றயன் பொய்ச்சிரம்
அயல்நக அதரிந்து மற்றதில் ஊணுகந்த வருத்தியே
(7)
திருந்து தொண்டர்கள் செப்புமின், மிகச் செல்வன் தன்னது திறமெலாம்
கருந்தடம் கண்ணினார்கள் தாந்தொழு கண்டியூருறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல்நிழல் அறமுரைத்ததும், மிகு வெம்மையார்
வருந்த வன்சிலையால் அம்மாமதில் மூன்று மாட்டிய வண்ணமே
(8)
நாவிரித்து அரன் தொல்புகழ் பல பேணுவீர், இறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய் கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப் பயன் ஆனஞ்சாடிய கொள்கையும், கொடி வரைபெற
மாவரைத் தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பதே
(9)
பெருமையே சரணாக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசுமின்
கருமையார் பொழில் சூழும் தண்வயல் கண்டியூருறை வீரட்டன்
ஒருமையால்உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்தேத்தவே
அருமையால் அவருக்குயர்ந்து எரியாகி நின்ற அத்தன்மையே
(10)
நமரெழு பிறப்பறுக்கும் மாந்தர்காள் நவிலுமின் உமைக் கேட்கின்றேன்
கமரழி வயல்சூழும் தண்புனல் கண்டியூருறை வீரட்டன்
தமர் அழிந்தெழு சாக்கியச் சமண் ஆதர்ஓதும் அதுகொளாது
அமரரானவர் ஏத்த அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே
(11)
கருத்தனைப், பொழில்சூழும் கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத், திறம் அடியர்பால் மிகக் கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாம் திகழ்காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...