(1)
வரிய மறையார், பிறையார், மலையோர் சிலையா வணக்கி
எரியமதில்கள் எய்தார், எறியும் உசலம் உடையார்
கரியமிடறும் உடையார், கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரியவிடைமேல் வருவார் அவர்எம் பெருமான் அடிகளே
(2)
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலனொன்றேந்திக்
கங்கை சடையில் கரந்தார், கடவூர் மயானம் அமர்ந்தார்
செங்கண் வெள்ளேறேறிச் செல்வம் செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே
(3)
ஈடல் இடபம் இசையஏறி, மழுவொன்றேந்திக்
காடதிடமா உடையார், கடவூர் மயானம் அமர்ந்தார்
பாடலிசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆடலரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே
(4)
இறை நின்றிலங்கு வளையாள் இளையாள் ஒருபாலுடையார்
மறை நின்றிலங்கு மொழியார், மலையார் மனத்தின் மிசையார்
கறை நின்றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறை நின்றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே
(5)
வெள்ளை எருத்தின் மிசையார், விரிதோடு ஒருகாதிலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர்பொன் சடைகள் துளங்கக்
கள்ளநகு வெண்தலையார், கடவூர் மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே
(6)
பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள்ளேறு உயர்த்ததுடையார், அதுவே ஊர்வார்
கன்றாவினம்சூழ் புறவில் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையர் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே
(7)
பாசமான களைவார், பரிவார்க்கமுதம்அனையார்
ஆசைதீரக் கொடுப்பார், அலங்கல் விடைமேல் வருவார்
காசைமலர் போல் மிடற்றார், கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே
(8)
செற்ற அரக்கன் அலறத் திகழ்சேவடி மெல் விரலால்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலியமாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே
(9)
வருமா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்
கருமான் உரிதோல் உடையார், கடவூர் மயானம் அமர்ந்தார்
திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காணமுன் ஒண்ணாப்
பெருமான் எனவும்வருவார் அவரெம் பெருமான் அடிகளே
(10)
தூயவிடைமேல் வருவார், துன்னாருடைய மதில்கள்
காய வேவச் செற்றார், கடவூர் மயானம் அமர்ந்தார்
தீயகருமம் சொல்லும் சிறுபுன்தேரர் அமணர்
பேய் பேயென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே
(11)
மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான் அகலம்அறியலாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...