திருக்கடவூர் மயானம் – அப்பர் தேவாரம்:

<– திருக்கடவூர் மயானம்

(1)
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாம் கடவூரின் மயானத்தார்
பழைய தம்அடியார் செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே
(2)
உன்னி வானவர் ஒதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழுவார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமான் அடிகளே
(3)
சூலமேந்துவர் தோலுடை ஆடையர்
ஆலமுண்டு அமுதே மிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமான் அடிகளே
(4)
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல்
மறவனார், கடவூரின் மயானத்தார்
அறவனார், அடியார் அடியார் தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே
(5)
கத்து காளி கதம்  தணிவித்தவர்
மத்தர் தாம் கடவூரின் மயானத்தார்
ஒத்து ஒவ்வாதன செய்துழல்வார் ஒரு
பித்தர் காணும் பெருமான் அடிகளே
(6)
எரிகொள் மேனி, இளம்பிறை வைத்தவர்
கரியர் தாம் கடவூரின் மயானத்தார்
அரியர் அண்டத்துளோர் அயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமான் அடிகளே
(7)
அணங்கு பாகத்தர், ஆரண நான்மறை
கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமான் அடிகளே
(8)
அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர் கடவூரின் மயானத்தார்
பரவுவார்இடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page