(1)
சடையுடையானும், நெய்யாடலானும், சரி கோவண
உடையுடையானும், மையார்ந்த ஒண்கண் உமை கேள்வனும்
கடையுடை நன்னெடு மாடமோங்கும் கடவூர்தனுள்
விடையுடை அண்ணலும் வீரட்டானத்தரன் அல்லனே
(2)
எரிதரு வார்சடையானும், வெள்ளை எருதேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றை மாலை புனைந்தேத்தவே
கரிதரு காலனைச் சாடினானும், கடவூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்தரன் அல்லனே
(3)
நாதனும், நள்ளிருள் ஆடினானும், நளிர் போதின்கண்
பாதனும், பாய்புலித் தோலினானும், பசுவேறியும்
காதலர் தண்கடவூரினானும், கலந்தேத்தவே
வேதமதுஓதியும் வீரட்டானத்தரன் அல்லனே
(4)
மழுவமர் செல்வனும், மாசிலாத பல பூதமுன்
முழவொலி யாழ்குழல் மொந்தை கொட்டமுது காட்டிடைக்
கழல்வளர் கால் குஞ்சித்தாடினானும், கடவூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டானத்தரன் அல்லனே
(5)
சுடர்மணிச் சுண்ண வெண்ணீற்றினானும், சுழல்வாயதோர்
படமணி நாகம் அரைக்கசைத்த பரமேட்டியும்
கடமணி மாவுரித் தோலினானும், கடவூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டானத்தரன் அல்லனே
(6)
பண்பொலி நான்மறை பாடியாடிப் பலஊர்கள் போய்
உண்பலி கொண்டுழல்வானும், வானின் ஒளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் திங்களானும், கடவூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டானத்தரன் அல்லனே
(7)
செவ்வழலாய் நிலனாகி நின்ற சிவமூர்த்தியும்
முவ்வழல் நான்மறை ஐந்துமாய முனி கேள்வனும்
கவ்வழல் வாய்க் கதநாகம் ஆர்த்தான், கடவூர்தனுள்
வெவ்வழல் ஏந்துகை வீரட்டானத்தரன் அல்லனே
(8)
அடியிரண்டோர் உடம்பு, ஐஞ்ஞான்கிருபது தோள், தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித்த முதல் மூர்த்தியும்
கடிகமழும் பொழில் சூழும் அந்தண் கடவூர்தனுள்
வெடிதலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே
(9)
வரைகுடையா மழை தாங்கினானும், வளர் போதின்கண்
புரைகடிந்தோங்கிய நான்முகத்தான் புரிந்தேத்தவே
கரைகடல்சூழ் வையம் காக்கின்றானும், கடவூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டானத்தரன் அல்லனே
(10)
தேரரும் மாசுகொள் மேனியாரும், தெளியாததோர்
ஆரரும் சொற்பொருளாகி நின்ற எமது ஆதியான்
காரிளம் கொன்றைவெண் திங்களானும், கடவூர்தனுள்
வீரமும் சேர்கழல் வீரட்டானத்தரன் அல்லனே
(11)
வெந்த வெண்ணீறணி வீரட்டானத்துறை வேந்தனை
அந்தணர் தம் கடவூர் உளானை, அணி காழியான்
சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறைஞான !சம்
பந்தன் செந்தமிழ் பாடியாடக் கெடும் பாவமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...