(1)
மருள்துயர் தீரஅன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவால் எயிற்றெரி போலும் குஞ்சிச்
சுருட்டிய நாவில் வெங்கூற்றம் பதைப்ப உதைத்துங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூருறை உத்தமனே
(2)
பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக், கண்குருதிப் புனலால் ஒழுக
உதைத்தெழு சேவடியான் கடவூருறை உத்தமனே
(3)
கரப்புறு சிந்தையர், காண்டற்கரியவன், காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன், நீள்புனல் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன், காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடியான் கடவூருறை உத்தமனே
(4)
மறித்திகழ் கையினன், வானவர் கோனை, மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடியான் கடவூருறை உத்தமனே
(5)
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடியான் கடவூருறை உத்தமனே
(6)
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த
ஆலினில் கீழிருந்து ஆரணம்ஓதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்தடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்த பிரான் கடவூருறை உத்தமனே
(7)
படர்சடைக் கொன்றையும், பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழல் மேனியன், உண்பலிக்கென்று உழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடியான் கடவூருறை உத்தமனே
(8)
வெண்தலை மாலையும் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன், பேயுகந்தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன், காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்த பிரான் கடவூருறை உத்தமனே
(9)
கேழலதாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்திட்ட அம்மாலவற்கன்று
ஆழியும் ஈந்து, அடுதிறல் காலனை அன்றடர்த்து
ஊழியுமாய பிரான் கடவூருறை உத்தமனே
(10)
தேன்திகழ் கொன்றையும் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்திகழ் ஐந்துகந்தாடும் பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்திகழ் வாளரக்கன் முடிபத்தும் குலைந்துவிழ
ஊன்றிய சேவடியான் கடவூருறை உத்தமனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...