(1)
பொள்ளத்த காயமாயப் பொருளினைப் போகமாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன்றேற்றி உணருமாறு உணரவல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே
(2)
மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மையலெய்தில்
விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார்ஆர்
பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கென்றும்
கண்ணிடை மணியர் போலும் கடவூர் வீரட்டனாரே
(3)
பொருத்திய குரம்பை தன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீர்
ஒருத்தனை உணர மாட்டீர், உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே
(4)
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே
(5)
தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவாறொன்றும் இன்றி
விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்குகின்றேன் கடவூர் வீரட்டனீரே
(6)
பழியுடை ஆக்கை தன்னில் பாழுக்கே நீரிறைத்து
வழியிடை வாழ மாட்டேன் மாயமும் தெளியகில்லேன்
அழிவுடைத்தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன் கடவூர் வீரட்டனீரே.
(7)
மாயத்தை அறிய மாட்டேன், மையல் கொள் மனத்தனாகிப்
பேயொத்துக் கூகையானேன், பிஞ்ஞகா, பிறப்பொன்றில்லீ
நேயத்தால் நினைய மாட்டேன் நீதனேன் நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர் வீரட்டனீரே
(8)
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரிறைத்தேன்
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடொத்தேன்
எற்றுளேன் என்செய்கேனான், இடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண் காணேன் கடவூர் வீரட்டனீரே
(9)
சேலினேர் அனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக்கன்பாய்ப்
பாலுநல் தயிர்நெய்யோடு பலபல ஆட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்காக அன்று
காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே
(10)
முந்துரு இருவரோடு மூவரும் ஆயினாரும்
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய
வந்திருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திருவங்கள் கேட்டார் கடவூர் வீரட்டனாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...