(1)
மலைக்கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையும் கொன்றிடும் ஆதலால்
கலைக்கை யானை கண்டீர் கடவூரரே
(2)
வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்
உள்ளவாறெனை உள்புகும் ஆனையார்
கொள்ளமாகிய கோயிலுள் ஆனையார்
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே
(3)
ஞானமாகிய நன்குணர் ஆனையார்
ஊனை வேவ உருக்கிய ஆனையார்
வேனல்ஆனை உரித்துமை அஞ்சவே
கானல் ஆனை கண்டீர் கடவூரரே
(4)
ஆலமுண்டு அழகாயதொர் ஆனையார்
நீலமேனி நெடும் பளிங்கானையார்
கோலமாய கொழுஞ் சுடரானையார்
காலஆனை கண்டீர் கடவூரரே
(5)
அளித்த ஆனஞ்சும் ஆடிய ஆனையார்
வெளுத்த நீள்கொடி ஏறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்
களித்த ஆனை கண்டீர் கடவூரரே
(6)
விடுத்த மால்வரை விண்ணுற ஆனையார்
தொடுத்த மால்வரை தூயதொர் ஆனையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொர் ஆனையார்
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே
(7)
மண்ணுளாரை மயக்குறும் ஆனையார்
எண்ணுளார் பலரேத்திடும் ஆனையார்
விண்ணுளார் பலரும்அறி ஆனையார்
கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே
(8)
சினக்கும் செம்பவளத் திரள் ஆனையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்
அனைக்கும் அன்புடையார் மனத்தானையார்
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே
(9)
வேதமாகிய வெஞ்சுடர் ஆனையார்
நீதியான் நிலனாகிய ஆனையார்
ஓதியூழி தெரிந்துணர் ஆனையார்
காதலானை கண்டீர் கடவூரரே
(10)
நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டும்என்று புக்கார்கள் இருவரும்
மாண்ட ஆரழலாகிய ஆனையார்
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே
(11)
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்களிற நெரித்த ஆனையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொர் ஆனையார்
கடுக்கை யானை கண்டீர் கடவூரரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...