திருக்கடம்பூர் (மேலக் கடம்பூர்) – சம்பந்தர் தேவாரம்:

(1)
வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடையானைத்
தேனமர் கொன்றையினானைத், தேவர் தொழப்படுவானைக்
கானமரும் பிணை புல்கிக் கலைபயிலும் கடம்பூரில்
தானமர் கொள்கையினானைத் தாள்தொழ வீடெளிதாமே
(2)
அரவினொடாமையும் பூண்டு, வந்துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி, விரும்பிப்
பரவும் தனிக்கடம்பூரில் பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கதுவாமே
(3)
இளிபடும் இன்சொலினார்கள் இருங்குழல் மேலிசைந்தேறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறைசூடி ஒண்ணுதலோடு உடனாகிப்
புலியதளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுது நாமே
(4)
பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர் நெடுமாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர் கடம்பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவி நின்றாடல் மகிழும்
பிறையுடை வார்சடையானைப் பேண வல்லார் பெரியோரே
(5)
தீவிரியக் கழலார்ப்பச் சேயெரி கொண்டு இடுகாட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த கண்ணுதலான் கடம்பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவமிலாரே
(6)
தண்புனல் நீள்வயல் தோறும் தாமரை மேல்அனம் வைகக்
கண்புணர் காவில் வண்டேறக் கள்ளவிழும் கடம்பூரில்
பெண்புனை கூறுடையானைப், பின்னு சடைப் பெருமானைப்
பண்புனை பாடல் பயில்வார் பாவமிலாதவர் தாமே
(7)
பலிகெழு செம்மலர் சாரப் பாடலொடு ஆடலறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ் கடம்பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான், ஒண்ணுதலாள் உமை கேள்வன்
புலியதள் ஆடையினான்தன் புனைகழல் போற்றல் பொருளே
(8)
பூம்படுகில் கயல் பாயப் புள்ளிரியப் புறங்காட்டில்
காம்படு தோளியர் நாளும் கண்கவரும் கடம்பூரில்
மேம்படு தேவியொர் பாகமேவி எம்மான் என வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே
(9)
திருமரு மார்பிலவனும், திகழ்தரு மாமலரோனும்
இருவருமாய் அறிவொண்ணா எரிஉருவாகிய ஈசன்
கருவரை காலில்அடர்த்த கண்ணுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுலகம் பெறுவாரே
(10)
ஆடை தவிர்த்து அறம் காட்டும் அவர்களும், அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார், சொல்லினும் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன்எம் வேத முதல்வன்
காடதனில் நடமாடும் கண்ணுதலான் கடம்பூரே
(11)
விடைநவிலும் கொடியானை வெண்கொடி சேர் நெடுமாடம்
கடைநவிலும் கடம்பூரில் காதலனைக் கடற்காழி
நடைநவில் ஞானசம்பந்தன் நன்மையால்ஏத்திய பத்தும்
படைநவில் பாடல் பயில்வார் பழியொடு பாவமிலாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page