திருக்கடம்பூர் (மேலக் கடம்பூர்) – அப்பர் தேவாரம் (1)

(1)
தளரும் கோளரவத்தொடு தண்மதி
வளரும் கோலவளர் சடையார்க்கிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே
(2)
வெலவலான் புலன்ஐந்தொடு, வேதமும்
சொலவலான், சுழலும் தடுமாற்றமும்
அலவலான், மனையார்ந்த மென்தோளியைக்
கலவலான் கடம்பூர்க் கரக்கோயிலே
(3)
பொய் தொழாது புலியுரியோன் பணி
செய்தெழா, எழுவார் பணி செய்தெழா
வைதெழாதெழுவார் அவர் எள்கநீர்
கைதொழா எழுமின் கரக்கோயிலே
(4)
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே
பண்ணினால் முனம் பாடலது செய்தே
எண்ணிலார் எயில் மூன்றும் எரித்தமுக்
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே
(5)
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழலான் கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே
(6)
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடையாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும்
கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலே
(7)
பண்ணினார் மறை பல்பல பூசனை
மண்ணினார் செய்வதன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுவன
கண்ணினார் கடம்பூர்க் கரக்கோயிலே
(8)
அங்கை ஆரழலேந்தி நின்று ஆடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கையான் உறையும் கரக்கோயிலைத்
தம்கையால் தொழுவார் வினை சாயுமே
(9)
நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே
(10)
பணங்கொள் பாற்கடல் பாம்பணையானொடும்
மணங்கமழ் மலர்த் தாமரையானவன்
பிணங்கும் பேரழல் எம்பெருமாற்கிடம்
கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலே
(11)
வரைக்கண் நாலஞ்சு தோளுடையான் தலை
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்கும் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page