திருக்கச்சி மேற்றளி – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கச்சி மேற்றளி

(1)
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய், மனமே புகுந்து நின்ற
சிந்தாய், எந்தை பிரான் திருமேற்றளி உறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே.
(2)
ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திருமேற்றளி உறையும்
மாட்டே, உன்னைஅல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே
(3)
மோறாந்தோரோரு கால் நினையாதிருந்தாலும்
வேறா வந்தென் உள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திருமேற்றளி உறையும்
ஏறே உன்னைஅல்லால் இனிஏத்த மாட்டேனே
(4)
உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என் குறை, என் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திருமேற்றளி உறையும்
பற்றே, நுன்னைஅல்லால் பணிந்தேத்த மாட்டேனே
(5)
எம்மான் எம்மனை என்றவர் இட்டிறந்தொழிந்தார்
மெய்ம்மாலாயின தீர்த்தருள் செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா ஈருரியாய் கனமேற்றளி உறையும்
பெம்மான் உன்னைஅல்லால் பெரிதேத்த மாட்டேனே
(6)
நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாய் என்ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற்றளி உறையும்
கோனே, உன்னையல்லால் குளிர்ந்தேத்த மாட்டேனே
(7)
கையார் வெஞ்சிலைநாண் அதன் மேல் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திருமேற்றளி உறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே
(8)
விரையார் கொன்றையினாய், விமலா இனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உடலில் உயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற்றளி உறையும்
அரையா, உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே
(9)
நிலையா நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற்றளி உறையும்
மலையே, உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே
(10)
 பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூரும் புறவில் திருமேற்றளிச் சிவனை
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன
சீரூர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page