திருக்கச்சி மேற்றளி – அப்பர் தேவாரம்:

<– திருக்கச்சி மேற்றளி

(1)
மறையது பாடிப் பிச்சைக்கென்றகம் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமுடிமேல், பெய்வளையாள் தனோடும்
கறையது கண்டம் கொண்டார், காஞ்சிமா நகர் தன்னுள்ளால்
இறையவர் பாடலாடல் இலங்கு மேற்றளியனாரே
(2)
மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர், விருத்தராகும்
பாலனார், பசுபதியார், பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலால் செற்றார், காஞ்சிமா நகர் தன்னுள்ளால்
ஏலநல் கடம்பன் தந்தை இலங்கு மேற்றளியனாரே
(3)
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண்ணிடை மணியின் ஒப்பார், காஞ்சிமா நகர் தன்னுள்ளால்
எண்ணிடை எழுத்துமானார் இலங்கு மேற்றளியனாரே
(4)
சோமனை அரவினோடு சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வானவர்கள் வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
ஏமநின்றாடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே
(5)
ஊனவர் உயிரினோடும், உலகங்கள் ஊழியாகித்
தானவர், தனமுமாகித் தனஞ்சயனோடெதிர்ந்த
கானவர், காளகண்டர், காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
ஏனம்அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே
(6)
மாயனாய் மாலனாகி மலரவனாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட்டாகித் தீர்த்தமாய்த் திரிதர்கின்ற
காயமாய்க் காயத்துள்ளார், காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
ஏயமென் தோளி பாகர் இலங்கு மேற்றளியனாரே
(7)
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடியாடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார், காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே
(8)
செல்வியைப் பாகம் கொண்டார், சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே
(9)
வேறிணையின்றி என்றும் விளங்கொளி மருங்கினாளைக்
கூறியல் பாகம் வைத்தார், கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார், அணிபொழில் கச்சி தன்னுள்
ஏறினைஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே
(10)
தென்னவன் மலையெடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற மணிமுடி நெரிய வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற்கருளிச் செய்தார் இலங்கு மேற்றளியனாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page