(1)
ஆலம் தான் உகந்தமுது செய்தானை
ஆதியை, அமரர் தொழுதேத்தும்
சீலம் தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
(2)
உற்றவர்க்குதவும் பெருமானை
ஊர்வதொன்றுடையான் உம்பர் கோனைப்
பற்றினார்க்கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக்கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன்பெற்றவாறே
.
(3)
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச்
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந்தானைக்
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
(4)
குண்டலம் திகழ் காதுடையானைக்
கூற்றுதைத்த கொடுந்தொழிலானை
வண்டலம்பும் மலர்க் கொன்றையினானை
வாளரா மதிசேர் சடையானைக்
கெண்டையந்தடங்கண் உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண்அடியேன் பெற்றவாறே
(5)
வெல்லும் வெண்மழு ஒன்றுடையானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை
அருமறையவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடியேன் பெற்றவாறே
(6)
திங்கள் தங்கிய சடையுடையானைத்
தேவ தேவனைச், செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடையானைச்
சாம வேதம் பெரிதுகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
(7)
விண்ணவர் தொழுதேத்த நின்றானை
வேதம் தான் விரித்தோத வல்லானை
நண்ணினார்க்கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
(8)
சிந்தித்தென்றும் நினைந்தெழுவார்கள்
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப் பற்றறுப்பானைப்
பாலொடானஞ்சும் ஆட்டுகந்தானை
அந்தமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
(9)
வரங்கள் பெற்றுழல் வாளரக்கர்தம்
வாலிய புரமூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி
நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனைப்
பரந்த தொல்புகழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
(10)
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்துள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
(11)
பெற்றம் ஏறுகந்தேற வல்லானைப்
பெரிய எம்பெருமான் என்றெப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர் பொழில் திருநாவல்ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகெய்துவர் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...