திருக்கச்சி ஏகம்பம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருக்கச்சி ஏகம்பம்

(1)
மறையானை, மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப், பெண்ணொடு ஆணாகிய பெம்மானை
இறையானை, ஏர்கொள் கச்சித் திருஏகம்பத்து
உறைவானை அல்லதுள்காது எனது உள்ளமே
(2)
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம்
உச்சியே புனைதல் வேடம், விடையூர்தியான்
கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமின் நும் மேல்வினை நையுமே
(3)
பாராரும் முழவமொந்தை குழல் யாழொலி
சீராலே பாடலாடல் சிதைவில்லதோர்
ஏரார் பூங்கச்சி ஏகம்பனை, எம்மானைச்
சேராதார் இன்பமாய அநெறி சேராரே
(4)
குன்றேய்க்கும் நெடுவெண் மாடக்கொடி கூடிப்போய்
மின்தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள்
மன்றேய்க்கும் மல்கு சீரான் மலி ஏகம்பம்
சென்றேய்க்கும் சிந்தையார் மேல்வினை சேராவே
(5)
சடையானைத், தலைகைஏந்திப் பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றும் கொண்டான் கலிக்கச்சியுள்
புடையேபொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்
உடையானை அல்லதுள்காது எனது உள்ளமே
(6)
மழுவாளோடு எழில்கொள் சூலப்படை வல்லார்தம்
கெழுவாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால்வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே
(7)
விண்ணுளார் மறைகள் வேதம் விரித்தோதுவார்
கண்ணுளார் கழலில் வெல்வார் கரி காலனை
நண்ணுவார் எழில்கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே
(8)
தூயானைத் தூயவாயம் மறைஓதிய
வாயானை, வாளரக்கன் வலி வாட்டிய
தீயானைத், தீதில் கச்சித் திருஏகம்பம்
மேயானை, மேவுவார் என்தலை மேலாரே
(9)
நாகம் பூண், ஏறதேறல், நறுங்கொன்றை தார்
பாகம் பெண், பலியும் ஏற்பர், மறை பாடுவர்
ஏகம்பம் மேவியாடும் இறை, இருவர்க்கும்
மாகம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே
(10)
போதியார் பிண்டியார் என்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின், அம் மாவெனும் கச்சியுள்
ஆதியார் மேவியாடும் திருஏகம்பம்
நீதியால் தொழுமின், உம் மேல்வினை நில்லாவே
(11)
அந்தண் பூங்கச்சி ஏகம்பனை அம்மானைக்
கந்தண் பூங்காழியூரன் கலிக் கோவையால்
சந்தமே பாடவல்ல தமிழ் !ஞானசம்
பந்தன் சொல் பாடியாடக் கெடும் பாவமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page