(1)
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தாரவர் போற்ற அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுதேத்த இடர் கெடுமே
(2)
வரந்திகழும் அவுணர் மாநகர் மூன்றுடன் மாய்ந்தவியச்
சரந்துரந்து எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்
குருந்த மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம்
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே
(3)
வண்ண வெண்பொடிப் பூசு மார்பில் வரியரவம் புனைந்து
பெண்ணமர்ந்தெரியாடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்
விண்ணமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்
திண்ணமாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே
(4)
தோலும் நூலும் துதைந்த வரைமார்பில் சுடலை வெண்ணீறணிந்து
காலன் மாள்வுறக் காலால் காய்ந்த கடவுள் கருதும்இடம்
மாலை வெண்மதி தோயும் மாமதில் கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த இடர் கெடுமே
(5)
தோடணிம் மலர்க் கொன்றைசேர் சடைத் தூமதியம் புனைந்து
பாடல் நான்மறையாகப், பல்கணப் பேய்கள் அவைசூழ
வாடல் வெண் தலையோடனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே
(6)
சாகம் பொன்வரையாகத் தானவர் மும்மதில் சாய எய்து
ஆகம் பெண்ணொரு பாகமாக, அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதில் கச்சி மாநகருள்
ஏகம்பத்துறை ஈசன் சேவடியேத்த இடர் கெடுமே
(7)
…
(8)
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளரவம் அணிந்து
நாணிடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலிதேர்ந்து
ஏணிலா அரக்கன்தன் நீள்முடி பத்தும் இறுத்தவன் ஊர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே
(9)
பிரமனும் திருமாலும் கைதொழப் பேரழலாய பெம்மான்
அரவம் சேர்சடை அந்தணன் அணங்கினொடமரும் இடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவம்சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல்வினை மாய்ந்தறுமே
(10)
குண்டுபட்ட அமணாயவரொடும், கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை அவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக்கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே
(11)
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி ஏகம்ப மேயவனைக்
காரினார் மணிமாடம் ஓங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவரோடும் சேர்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...