(1)
பாயு மால்விடை மேலொரு பாகனே, பாவை தன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே, சோதி மாலெரி வேதத் துவனியே
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே, ஆலநீழல் அரும்பொருள் ஆதியே
காய வில்மதன் பட்டது கம்பமே, கண்ணுதல் பரமற்கிடம் கம்பமே
(2)
சடையணிந்ததும் வெண்தலை மாலையே, தம்உடம்பிலும் வெண்தலை மாலையே
படையில் அங்கையில் சூலமதென்பதே, பரந்திலங்கையில் சூலமதென்பதே
புடைபரப்பன பூத கணங்களே, போற்றிசைப்பன பூத கணங்களே
கடைகள்தோறும் இரப்பது மிச்சையே, கம்பமேவி இருப்பதும் இச்சையே
(3)
வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே, வேறு முன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே, ஆனமாசுண மூசுவது ஆகமே
புள்ளியாடை உடுப்பது கத்துமே, போனஊழி உடுப்பது உகத்துமே
கள்ளுலா மலர்க் கம்பம் இருப்பதே, காஞ்சிமாநகர்க் கம்பம் இருப்பதே
(4)
முற்றலாமை அணிந்த முதல்வரே, மூரியாமை அணிந்த முதல்வரே
பற்றிவாளரவு ஆட்டும் பரிசரே, பாலுநெய் உகந்தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே, வானினோடு கலம் பலி தேர்வதே
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே, காஞ்சிமாநகர்க் கம்பம் இருப்பதே
(5)
வேடனாகி விசையற்கருளியே, வேலை நஞ்ச மிசையல் கருளியே
ஆடுபாம்பரை ஆர்த்ததுடையதே, அஞ்சுபூதமும் ஆர்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி அழகிதே, குற்றமில் மதிக் கண்ணி அழகிதே
காடுவாழ் பதியாவதும் உம்மதே, கம்பமா பதிஆவதும் உம்மதே
(6)
இரும்பு கைக்கொடி தங்கழல் கையதே, இமய மாமகள் தங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே, ஆழியான்தன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகல் நடமாடுதல் செய்துமே, பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
கரும்பு மொய்த்தெழு கம்பம் இருப்பதே, காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே
(7)
முதிர மங்கை தவம் செய்த காலமே, முன்பு மங்கை தவம் செய்த காலமே
வெதிர்களோடு அகில் சந்தம் உருட்டியே, வேழமோடகில் சந்தம் உருட்டியே
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே, ஆன்ஐஆடு வரத் தழுவத்தொடே
கதிர்கொள் பூண்முலைக் கம்பம் இருப்பதே, காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே
(8)
பண்டரக்கன் எடுத்த பலத்தையே, பாய்ந்தரக்கல் நெடுத்த பலத்தையே
கொண்டரக்கியதும் கால் விரலையே, கோள் அரக்கியதும் கால்வு இரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே, உடுபதிக்கிடமுண்டு அத்தலையிலே
கண்டநஞ்சம் அடக்கினை கம்பமே, கடவுள் நீஇடம் கொண்டது கம்பமே
(9)
தூணியான சுடர்விடு சோதியே, சுத்தமான சுடர்விடு சோதியே
பேணிஓடு பிரமப் பறவையே, பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே, சித்தமோடு கீழூழி திரிந்துமே
காண நின்றனர் உற்றது கம்பமே, கடவுள் நீஇடமுற்றது கம்பமே
(10)
ஓருடம்பினை ஈர்உரு ஆகவே, உன்பொருள்திறம் ஈருருவாகவே
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே, ஆற்றல் எய்தற்கரிது பெரிதுமே
தேரரும் அறியாது திகைப்பரே, சித்தமும் மறியா துதி கைப்பரே
கார்நிறத்து அமணர்க்கொரு கம்பமே, கடவுல் நீஇடம் கொண்டது கம்பமே
(11)
கந்தமார் பொழில் சூழ்தரு கம்பமே, காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே, பூசுரன்தன் விரும்பிப் புகலியே
அந்தமில் பொருளாயின கொண்டுமே, அண்ணலின் பொருளாயின கொண்டுமே
பந்தனின் இயல் பாடிய பத்துமே, பாட வல்லவர் ஆயின பத்துமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...