திருக்கச்சி ஏகம்பம் – அப்பர் தேவாரம் (2):

<– திருக்கச்சி ஏகம்பம்

(1)
நம்பனை, நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை ஆற்றை, அணிபொழில் கச்சியுள்ளே
கம்பனைக், கதிர்வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின்றேனே
(2)
ஒருமுழம்உள்ள குட்டம், ஒன்பது துளையுடைத்தாய்
அரைமுழம் அதனகலம், அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே
(3)
மலையினார் மகளோர் பாக மைந்தனார், மழுவொன்றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றும் தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலமேந்தி, ஏகம்பம் மேவினாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே
(4)
பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக்கணிந்த செல்வர்
தீர்த்தமாம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்ப மேவினாரை
வாழ்த்துமாறறிய மாட்டேன் மால்கொடு மயங்கினேனே
(5)
மையினார் மலர்நெடுங்கண் மங்கையோர் பங்கராகிக்
கையிலோர் கபாலமேந்திக் கடைதொறும் பலிகொள்வார் தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்ப மேவினாரைக்
கையினால் தொழவல்லார்க்குக் கடுவினை களையலாமே
(6)
தருவினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும்
திருவினைத், திருஏகம்பம் செப்பிட உறையவல்ல
உருவினை, உருகியாங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே
(7)
கொண்டதோர் கோலமாகிக் கோலக்கா உடைய கூத்தன்
உண்டதோர் நஞ்சமாகி உலகெலாம் உய்ய உண்டான்
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே
(8)
படமுடை அரவினோடு பனிமதி அதனைச் சூடிக்
கடமுடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள் ஏகம்ப மேவினான் தன்
நடமுடை ஆடல் காண ஞாலந்தான் உய்ந்தவாறே
(9)
பொன்திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியில் புகுந்தென் உள்ளம் எள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக் குவளையம் கண்டர் எம்மை
இன்துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே
(10)
துருத்தியார் பழனத்துள்ளார், தொண்டர்கள் பலருமேத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி ஏகம்ப மேவினார்க்கு
வருத்தி நின்றடிமை செய்வார் வல்வினை மாயுமன்றே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page