திருக்கச்சி ஏகம்பம் – அப்பர் தேவாரம் (3):

<– திருக்கச்சி ஏகம்பம்

(1)
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித்தாய், கட்ட நோய்பிணி தீர்த்தாய், கலந்தருளிப்
போதுவித்தாய், நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால்
மோதுவிப்பாய், உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே
(2)
எத்தைக் கொண்டு எத்தகையேழை அமனொடிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்தென்னக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினில் சோதியும் மொய்பவளத்
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழிற்கச்சி ஏகம்பனே
(3)
மெய்யம்பு கோத்த விசயனொடன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பு எய்தாவம் அருளிச் செய்தாய், புர மூன்றெரியக்
கையம்பு எய்தாய், நுன் கழலடி போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தாய், கொடி மாமதில் சூழ்கச்சி ஏகம்பனே
(4)
குறிக்கொண்டிருந்து செந்தாமரை ஆயிரம் வைகல் வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீஒரு பூக்குறைவித்துக் கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடையாய் பெருங்காஞ்சியெம் பிஞ்ஞகனே
(5)
உரைக்கும் கழிந்திங்குணர்வரியான், உள்குவார் வினையைக்
கரைக்கும் எனக்கை தொழுவதல்லால், கதிரோர்கள் எல்லாம்
விரைக்கொள் மலரவன், மால், எண் வசுக்களே, காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க்கறியவொண்ணான் எங்கள் ஏகம்பனே
(6)
கருவுற்ற நாள்முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றென் உள்ளமும், நானும் கிடந்தலந்து எய்த்தொழிந்தேன்
திருவொற்றியூரா திருஆலவாயா திருவாரூரா
ஒரு பற்றிலாமையும் கண்டிரங்காய் கச்சி ஏகம்பனே
(7)
அரிஅயன் இந்திரன் சந்திராதித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே
(8)
பாம்பரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால் வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பரைப் பூசித் தரையில் புரண்டு நின்தாள் சரணென்று
ஏம்பலிப்பார்கட்கிரங்கு கண்டாய் கச்சி ஏகம்பனே
(9)
ஏன்று கொண்டாய் என்னை எம்பெருமான், இனி அல்லம்என்னில்
சான்று கண்டாய் இவ்வுலகமெல்லாம், தனியேன் எந்தனை
ஊன்றிநின்றார் ஐவர்க்கொற்றி வைத்தாய், பின்னை ஒற்றியெல்லாம்
சோன்று கொண்டாய் கச்சிஏகம்ப மேய சுடர்வண்ணனே
(10)
உந்தி நின்றார் உந்தன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றித்
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணியறிவான்
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதிற்கச்சியாய்
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்திறைஞ்சுவதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page