(1)
பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே
வண்டுலா மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே
(2)
நச்சி நாளும் நயந்தடியார் தொழ
இச்சையால் உமைநங்கை வழிபடக்
கொச்சையார் குறுகார் செறி தீம்பொழில்
கச்சி ஏகம்பமே கை தொழுமினே
(3)
ஊனிலாவி இயங்கி உலகெலாம்
தானுலாவிய தன்மையர் ஆகிலும்
வானுலாவிய பாணி பிறங்க!வெங்
கானிலாடுவர் கச்சி ஏகம்பரே
(4)
இமையா முக்கணர் என் நெஞ்சத்துள்ளவர்
தமையாரும் அறிவொண்ணாத் தகைமையர்
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்
நமையாளும் அவனைத் தொழுமின்களே
(5)
மருந்தினோடு நற்சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக்காய எம் புண்ணியன்
கருந்தடம் கண்ணினாள்உமை கைதொழ
இருந்தவன் கச்சி ஏகம்பத்தெந்தையே
(6)
பொருளினோடு நற்சுற்றமும், பற்றிலர்க்கு
அருளும் நன்மை தந்தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம்
இருள் கெடச் சென்று கைதொழுதேத்துமே
(7)
மூக்கு வாய்செவி கண் உடலாகிவந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்குவான், நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே
(8)
பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொடு ஆணென்று பேசற்கரியவன்
வண்ணமில்லி வடிவு வேறாயவன்
கண்ணிலுண் மணி கச்சியேகம்பனே
(9)
திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவனாய் உணர்வாய் உணர்வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சியே கம்பனே
(10)
இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை
வடிவின் மாதர்திறம் மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழில் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே
(11)
இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்கலை எடுக்க விரலூன்றலும்
கலங்கிக் கச்சியே கம்பவோ என்றலும்
நலங்கொள் செலவளித்தான் எங்கள் நாதனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...