திருக்கச்சி ஏகம்பம் – அப்பர் தேவாரம் (5):

<– திருக்கச்சி ஏகம்பம்

(1)
பூமேலானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர் எனாமை நடுக்குறத்
தீமேவும் உருவா திருஏகம்பா
ஆமோ அல்லல்பட அடியோங்களே
(2)
அருந்திறல் அமரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத், தேவியோடு
இருந்தவன், எழிலார் கச்சி ஏகம்பம்
பொருந்தச் சென்று புடைபட்டெழுதுமே
(3)
கறைகொள் கண்டத்தெண்தோள் இறை, முக்கணன்
மறைகொள் நாவினன், வானவர்க்காதியான்
உறையும் பூம்பொழில்சூழ் கச்சிஏகம்பம்
முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே
(4)
பொறிப் புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை
நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்புறும் அமுதாயவன் ஏகம்பம்
குறிப்பினால் சென்று கூடித் தொழுதுமே
(5)
சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு
அந்தியாய் ஆனலாய்ப் புனல் வானமாய்ப்
புந்தியாய்ப் புகுந்துஉள்ள நிறைந்தஎம்
எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே
(6)
சாக்கியத்தோடு மற்றும் சமண்படும்
பாக்கியம் இலார் பாடு செலாதுறப்
பூக்கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே
(7)
மூப்பினோடு முனிவுறுத்தெந்தமை
ஆர்ப்பதன் முன், அணி அமரர்க்கிறை
காப்பதாய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்பதாக நாம் சென்றடைந்து உய்துமே
(8)
ஆலு மாமயில் சாயல் நல்லாரொடும்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற்றண்ணல் ஏகம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே
(9)
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்யனைச், சுடர் வெண் மழுவேந்திய
கையனைக், கச்சி ஏகம்பம் மேவிய
ஐயனைத், தொழுவார்க்கில்லை அல்லலே
(10)
அரக்கன் தன்வலி உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத்தான் முடிதோள் நெரித்து
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம்
தருக்கதாக நாம் சார்ந்து தொழுதுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page