திருக்கச்சி ஏகம்பம் – அப்பர் தேவாரம் (6):

<– திருக்கச்சி ஏகம்பம்

(1)
கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன் காண்
    குவலயன் காண், குவலயத்தின் நீரானான் காண்
காற்றவன் காண், கனலவன் காண், கலிக்கும் மின் காண்
    கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன் காண், நிலாவூரும் சென்னியான் காண்
    நிறையார்ந்த புனல்கங்கை நிமிர்சடை மேல்
ஏற்றவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(2)
பரந்தவன் காண், பல்லுயிர்களாகி எங்கும்
    பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன் காண், தூமலர் அங்கண்ணியான் காண்
    தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன் காண், வையகங்கள் பொறை தீர்ப்பான் காண்
    மலர்தூவி நினைந்தெழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(3)
நீற்றவன் காண், நீராகித் தீயானான் காண்
    நிறைமழுவும் தமருகமும் எரியும் கையில்
தோற்றவன் காண், தோற்றக் கேடில்லாதான் காண்
    துணையிலி காண், துணையென்று தொழுவார் உள்ளம்
போற்றவன் காண், புகழ்கள் தமைப் படைத்தான் தான் காண்
    பொறியரவும் விரிசடை மேல் புனலும் கங்கை
ஏற்றவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(4)
தாயவன் காண், உலகிற்குத் தன்னொப்பில்லாத்
    தத்துவன் காண், மலைமங்கை பங்கா என்பார்
வாயவன் காண், வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண்
    வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்
சேயவன் காண், நினைவார்க்குச் சித்தமாரத்
    திருவடியே உள்கி நினைந்தெழுவார் உள்ளம்
ஏயவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(5)
(6)
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்வாய் அம்பால்
    ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான் காண்
பழித்தவன் காண் அடையாரை, அடைவார் தங்கள்
    பற்றவன் காண், புற்றரவ நாணினான் காண்
சுழித்தவன் காண் முடிக்கங்கை, அடியே போற்றும்
    தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(7)
அசைந்தவன் காண், நடமாடிப் பாடல் பேணி
    அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேடப்
பசைந்தவன் காண், பேய்க் கணங்கள் பரவியேத்தும்
    பான்மையன் காண், பரவி நினைந்தெழுவார் தம்பால்
கசிந்தவன் காண், கரியினுரி போர்த்தான் தான் காண்
    கடலில் விடமுண்டமரர்க்கு அமுதமீய
இசைந்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(8)
முடித்தவன் காண், வன்கூற்றைச் சீற்றத் தீயால்
    வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன் காண், பிஞ்ஞகனாம் வேடத்தான் காண்
    பிணையல் வெறிகமழ் கொன்றை அரவு சென்னி
முடித்தவன் காண், மூவிலை நல் வேலினான் காண்
    முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(9)
வருந்தவன் காண், மனமுருகி நினையாதார்க்கு
    வஞ்சன் காண், அஞ்செழுத்து நினைவார்க்கென்றும்
மருந்தவன் காண், வான் பிணிகள் தீரும் வண்ணம்
    வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப்
பரந்தவன் காண், படர்சடை எட்டுடையான் தான் காண்
    பங்கயத்தோன் தன் சிரத்தை ஏந்தி ஊரூர்
இரந்தவன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(10)
வெம்மான உழுவை அதள்உரி போர்த்தான் காண்
    வேதத்தின் பொருளான் காண் என்றியம்பி
விம்மா நின்றழுவார்கட்களிப்பான் தான் காண்
    விடையேறித் திரிவான் காண், நடஞ்செய் பூதத்து
அம்மான் காண், அகலிடங்கள் தாங்கினான் காண்
    அற்புதன் காண், சொற்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே
(11)
அறுத்தான் காண் அயன் சிரத்தை, அமரர் வேண்ட
    ஆழ்கடலின் நஞ்சுண்டு, அங்கு அணிநீர்க் கங்கை
செறுத்தான் காண், தேவர்க்கும் தேவன் தான் காண்
    திசையனைத்தும் தொழுதேத்தக் கலைமான் கையில்
பொறுத்தான் காண், புகலிடத்தை நலிய வந்து
    பொருகயிலை எடுத்தவன்தன் முடிதோள் நாலஞ்சு
இறுத்தான் காண், எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page